ADDED : ஏப் 20, 2026 10:47 PM

மும்பை: கிரிக்கெட் லீக் தொடரில் பஞ்சாப் கேப்டனாக பட்டையை கிளப்புகிறார் ஷ்ரேயஸ் ஐயர். இதுவரை 5 வெற்றி தேடித் தந்துள்ளார். 6 போட்டியில் 208 ரன் (ஸ்டிரைக் ரேட் 182.45) எடுத்துள்ளார். இவரை இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்க பி.சி.சி.ஐ., விரும்புகிறது.
இந்த ஆண்டு இந்திய அணி அதிக 'டி-20' போட்டிகளில் பங்கேற்க உள்ளது. ஆசிய விளையாட்டு, வெஸ்ட் இண்டீஸ் தொடர்கள் ஒரே சமயத்தில் நடக்க உள்ளன. இதை கருத்தில் கொண்டு 30-35 வீரர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதிலிருந்து இரண்டு இந்திய 'டி-20' அணிகள் அறிவிக்கப்பட உள்ளன.
தற்போதைய லீக் தொடரில் அசத்தும் வைபவ் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வால், பிரியான்ஷ் ஆர்யா, ரகுவன்ஷி, ரஜத் படிதார், படோனி, சஷாங்க் சிங், அனுகுல் ராய், பிஷ்னோய், கார்த்திக் தியாகி, கீப்பர் துருவ் ஜுரல் உள்ளிட்ட இளம் வீரர்கள் வாய்ப்பு பெறலாம். கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர், 31, நியமிக்கப்படலாம். 'சீனியர்' வீரர்கள் அடங்கிய இன்னொரு அணிக்கு கேப்டனாக சூர்யகுமார், 35, தொடரலாம்.
வரும் ஜூனில் நடக்க உள்ள அயர்லாந்துக்கு எதிரான தொடரில் இளம் இந்திய அணி களமிறங்கலாம். இதில் ஷ்ரேயஸ் அசத்தும் பட்சத்தில், சூர்யகுமாரின் கேப்டன் பதவிக்கு ஆபத்து ஏற்படும்.
பிரியமான பிரியான்ஷ் ஆர்யா
முல்லன்புர்: புது சண்டிகரில் உள்ள முல்லன்புர் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் பஞ்சாப் அணி, லக்னோவை வீழ்த்தியது. இதில் பஞ்சாப் அணியின் பிரியான்ஷ் ஆர்யா (97 ரன், 37 பந்து, 4x4, 9x6), கூப்பர் கொனாலி (87 ரன், 46 பந்து, 8x4, 7x6) மிரட்டினர். ரூ. 27 கோடிக்கு வாங்கப்பட்ட 'காஸ்ட்லி' லக்னோ கேப்டன் ரிஷாப் பன்ட் பெரிதாக சோபிக்கவில்லை. ஆட்டம் முடிந்ததும் பிரியான்ஷ் ஆர்யாவை தட்டிக் கொடுத்து பாராட்டினார் லக்னோ அணி உரிமையாளர் சஞ்சிவ் கோயங்கா. இதை பார்த்த ரசிகர்கள் அடுத்த முறை ஏலத்தில் எவ்வளவு தொகை கொடுத்தும் பிரியான்ஷ் ஆர்யாவை கோயங்கா வாங்கிவிடுவார் என 'கமென்ட்' அடித்தனர்.
* ஆஸ்திரேலிய 'பேட்டர்' ஜோஷ் இங்லிசை ரூ. 8.6 கோடிக்கு லக்னோ அணி ஒப்பந்தம் செய்ததது. கடந்த ஏப். 18ல் திருமணம் முடித்த இவர், கிரிக்கெட் லீக் தொடரின் முதல் கட்ட போட்டிகளில் பங்கேற்க இயலவில்லை. விரைவில் இந்தியா வர உள்ளார். மும்பைக்கு எதிரான போட்டியில் (மே 4) பங்கேற்கலாம்.
சிக்சர் அடிச்சா...பேட் பரிசு
புது சண்டிகர்: கிரிக்கெட் லீக் தொடரில் பஞ்சாப் அணி சிக்சர் மழை பொழிகிறது. குஜராத் (14 சிக்சர்), சென்னை (9), ஐதராபாத் (16), மும்பை (9), லக்னோ (21) பந்துவீச்சை சிதறடித்து, மொத்தம் 69 சிக்சர் அடித்துள்ளது. இதன் ரகசியம் பற்றி ஷ்ரேயஸ் ஐயர் கூறுகையில்,''பிரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கொனாலி உள்ளிட்ட சக வீரர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது இந்த சீசனில் அதிக சிக்சர் அடிப்பவருக்கு எனது பேட் பரிசாக அளிக்கப்படும் என தெரிவித்தேன். இதை ஏற்றுக் கொண்டு சிக்சர் விளாசுவது அணியின் வெற்றிக்கு கைகொடுக்கிறது,'' என்றார்.
