சுப்மன் கில் காயம்: ஒருநாள் தொடருக்கான பயிற்சியில்
சுப்மன் கில் காயம்: ஒருநாள் தொடருக்கான பயிற்சியில்
UPDATED : செப் 25, 2026 10:49 PM
ADDED : செப் 25, 2026 10:40 PM

திருவனந்தபுரம்: இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று ஒருநாள் (செப். 27, 30, அக். 3), ஐந்து 'டி-20' போட்டிகள் (அக். 6, 9, 11, 14, 17) கொண்ட தொடரில் பங்கேற்கிறது. திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டி (செப். 27) நடக்கவுள்ளது.
இதற்கு தயாராகும் விதமாக இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். கேப்டன் சுப்மன் கில், ரோகித் சர்மா, விராத் கோலி உள்ளிட்டோர் பேட்டிங் வலைப்பயிற்சி மேற்கொண்டனர். வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் வீசிய பந்து சுப்மன் கில்லின் முழங்கையில் பலமாக தாக்கியது. வலியால் துடித்த இவருக்கு, 20 நிமிடம் மருத்துவ முதலுதவி அளிக்கப்பட்டது. சிறிது நேரத்திற்கு பின், மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டார்.
சீனியர் 'ஆல்-ரவுண்டர்' ரவிந்திர ஜடேஜா, வேகப்பந்துவீச்சாளர்களான முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோர் பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டனர்.
செப். 23ல் திருவனந்தபுரம் வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியினர் இன்னும் பயிற்சியில் ஈடுபடவில்லை.
24 ஆண்டு ஏக்கம்
வெஸ்ட் இண்டீஸ் தலைமை பயிற்சியாளர் டேரன் சமி கூறுகையில், ''கடந்த 2002ல் வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. அதன்பின் இங்கு ஒருநாள் தொடரை வென்றதில்லை. 24 ஆண்டுகளுக்கு பின் இம்முறை சாதிப்போம்,'' என்றார்.
