'ஆறு' பும்ரா... 'இருநூறு' ஜெய்ஸ்வால் * இந்தியா 'சூப்பர்' ஆட்டம்
'ஆறு' பும்ரா... 'இருநூறு' ஜெய்ஸ்வால் * இந்தியா 'சூப்பர்' ஆட்டம்
ADDED : பிப் 03, 2024 11:13 PM

விசாகப்பட்டனம்: இரண்டாவது டெஸ்டில் 'வேகத்தில்' மிரட்டிய பும்ரா 6 விக்கெட் வீழ்த்தினார். ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசினார். இந்திய அணி வலுவான முன்னிலை நோக்கி முன்னேறுகிறது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற இங்கிலாந்து 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் விசாகப்பட்டனத்தில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 336/6 ரன் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் (179), அஷ்வின் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரட்டை சதம்
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. அஷ்வின் 20 ரன்னில் அவுட்டானார். ஜெய்ஸ்வால் 191 ரன்னில் இருந்த போது, பஷிர் ஓவரில் அடுத்தடுத்து சிக்சர், பவுண்டரி அடித்து முதல் இரட்டை சதம் அடித்தார். இவர் 209 ரன்னுக்கு(290 பந்து, 19 பவுண்டரி, 7 சிக்சர்) ஆண்டர்சன் 'வேகத்தில்' அவுட்டானார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 396 ரன் எடுத்தது.
இங்கிலாந்து சார்பில் சோயப் பஷிர், ஆண்டர்சன், ரேஹன் அகமது தலா 3 விக்கெட் சாய்த்தனர்.
பும்ரா அபாரம்
பின் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு டக்கெட் (21), கிராலே ஜோடி 'பாஸ் பால்' பாணியில் அதிரடி துவக்கம் தந்தது. பும்ரா வீசிய 9 வது ஓவரில் கிராலே, 4 பவுண்டரி அடித்தார். இவர் 76 ரன் எடுத்த நிலையில், அக்சர் சுழலில் சிக்கினார். இதன் பின் பும்ரா மிரட்டத் துவங்கினார். 'ரிவர்ஸ் ஸ்விங்', 'யார்க்கர்' என போட்டுத் தாக்கினார்.
முதலில் ஜோ ரூட்டை (5) அவுட்டாக்கிய இவர், போப்பையும் (23) போல்டாக்கினார். பேர்ஸ்டோவையும் (25) வெளியேற்றினார். நீண்ட நேரம் தொல்லை கொடுத்த ஸ்டோக்சை (47) போல்டாக்கிய பும்ரா, டெஸ்ட் அரங்கில் 150வது விக்கெட்டை பெற்றார். ஹார்ட்லே 21 ரன் எடுத்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 253 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
பும்ரா 6, குல்தீப் 3 விக்கெட் சாய்த்தனர்.
இந்தியா முன்னிலை
முதல் இன்னிங்சில் 143 ரன் முன்னிலை பெற்ற இந்தியா, இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. இரண்டாவது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 28 ரன் எடுத்து 171 ரன் முன்னிலை பெற்றிருந்தது. ரோகித் (13), ஜெய்ஸ்வால் (15) அவுட்டாகாமல் இருந்தனர். இன்று சிறப்பாக பேட் செய்யும் பட்சத்தில், வலுவான முன்னிலையை எட்டி இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுக்கலாம்.
இளம் வயதில்
டெஸ்ட் அரங்கில் குறைந்த வயதில் இரட்டை சதம் அடித்த இந்திய வீரர்களில் 3வது இடம் பிடித்தார் ஜெய்ஸ்வால் (22 வயது, 37 நாள்). காம்ப்ளி (21 வயது, 35 நாள், 21 வயது, 55 நாள்), கவாஸ்கர் (21 வயது, 283 நாள்) முதல் 2 இடத்தில் உள்ளனர்.
* கங்குலி (239), காம்ப்ளி (227, 224), காம்பிருக்கு (206) அடுத்து இரட்டை சதம் அடித்த இந்திய இடது கை பேட்டர் ஆனார் ஜெய்ஸ்வால்.
5
சொந்தமண்ணில் நடந்த டெஸ்டில், எதிரணி 'ஆல் அவுட்டான' போதும், இந்திய பவுலர் அஷ்வின், எந்த ஒரு விக்கெட்டும் வீழ்த்தாதது நேற்று ஐந்தாவது முறையாக நடந்தது. 2016ல் சென்னை (எதிரணி-இங்கிலாந்து), 2017ல் கோல்கட்டா (இலங்கை), 2019 ல் ராஞ்சி (தென் ஆப்ரிக்கா), கோல்கட்டா (வங்கதேசம்) டெஸ்டில் இதுபோல நடந்தது.
6
இந்திய மண்ணில் தனது சிறந்த டெஸ்ட் பந்துவீச்சை நேற்று பதிவு செய்தார் பும்ரா. 45 ரன்னுக்கு 6 விக்கெட் சாய்த்தார். இதற்கு முன் 2022ல் பெங்களூருவில் 24 ரன்னுக்கு 5 விக்கெட் (இலங்கை) வீழ்த்தி இருந்தார்.
10
டெஸ்டில் குறைந்த இன்னிங்சில் 200 ரன் எடுத்த ஆறாவது இந்தியர் ஆனார் ஜெய்ஸ்வால் (10). கருண் நாயர் (3), காம்ப்ளி (4), கவாஸ்கர் (8), மயங்க் அகர்வால் (8), புஜாரா (9) முதல் ஐந்து இடத்தில் உள்ளனர்.
எச்சரிக்கை தேவை
முதல் டெஸ்ட் முதல் இன்னிங்சில் இந்தியா 190 ரன் முன்னிலை பெற்றது. வெற்றி உறுதி என நம்பப்பட்ட நிலையில் இரண்டாவது இன்னிங்சில் வேகமாக ரன் சேர்த்த இங்கிலாந்து, இந்தியாவை வீழ்த்தியது.
2வது டெஸ்டில் இந்தியா தற்போது, 171 ரன் முன்னிலை பெற்றுள்ளது. இன்று 3வது நாள் ஆட்டத்தில் இந்திய பேட்டர்கள் சிறப்பாக செயல்பட்டு அதிக ரன் சேர்த்தால் மட்டுமே, 'அதிரடி' இங்கிலாந்து அணியை வீழ்த்த முடியும்.
உற்சாக கொண்டாட்டம்
உ.பி.,யின் பின்தங்கிய கிராமத்தில் இருந்து கிரிக்கெட் மீது கொண்ட ஆர்வத்தால் மும்பை வந்தவர் ஜெய்ஸ்வால். இரவில் மும்பை, ஆசாத் மைதான கூடாரங்களில் துாங்குவார். ஜூனியர் உலக கோப்பை, ஐ.பி.எல்., தொடரில் அசத்திய நிலையில் இவரது வாழ்க்கை மாறியது. நேற்று இரட்டை சதம் விளாசியதும், வார்னர் (ஆஸி.,) போல துள்ளிக் குதித்து மகிழ்ந்தார்.
2008க்குப் பின்...
கடந்த 2008ல் காம்பிர், டில்லி டெஸ்டில் (எதிர்-ஆஸி.,) 206 ரன் எடுத்தார். இதன் பின் இரட்டை சதம் அடித்த இந்திய இடது கை பேட்டர் ஆனார் ஜெய்ஸ்வால்.
* கவாஸ்கருக்கு (1979, ஓவல்) அடுத்து இங்கிலாந்துக்கு எதிராக இரட்டை சதம் விளாசிய துவக்க வீரர் ஆனார்.
* இந்திய மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக இரட்டை சதம் விளாசிய முதல் துவக்க வீரர் ஆனார்.
நுாற்றாண்டின் சிறந்த பவுலிங்
விசாகப்பட்டனத்தில் 45 ரன்னுக்கு 6 விக்கெட் சாய்த்த பும்ரா, இந்த நுாற்றாண்டில் சொந்த மண்ணில் சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆனார்.
கபில்தேவுக்கு அடுத்து
கடந்த 1983, ஆமதாபாத் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் 3, 4, 5, 6வது பேட்டர்களை கபில்தேவ் அவுட்டாக்கினார். தற்போது 41 ஆண்டுக்குப் பின் இதுபோல இங்கிலாந்தின் 3 முதல் 6 வரையிலான விக்கெட்டை சாய்த்தார் பும்ரா.
6781
டெஸ்டில் குறைந்த பந்துகளில் 150 விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர் ஆனார் பும்ரா. இவர் 6,781 பந்தில் இந்த இலக்கை எட்டினார். உமேஷ் யாதவ் (7,661), முகமது ஷமி (7,755), கபில் தேவ் (8,378), அஷ்வின் (8,380) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
