/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தென் ஆப்ரிக்க அணி வெற்றி: ஆப்கானிஸ்தான் ஏமாற்றம்
/
தென் ஆப்ரிக்க அணி வெற்றி: ஆப்கானிஸ்தான் ஏமாற்றம்
ADDED : பிப் 21, 2025 10:46 PM

கராச்சி: சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் அசத்திய தென் ஆப்ரிக்க அணி 107 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
பாகிஸ்தான், துபாயில், ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி 9வது சீசன் நடக்கிறது. கராச்சியில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த தென் ஆப்ரிக்க அணிக்கு டோனி டி ஜோர்ஜி (11) ஏமாற்றினார். பின் இணைந்த ரியான் ரிக்கல்டன், கேப்டன் டெம்பா பவுமா ஜோடி நம்பிக்கை தந்தது. பொறுப்பாக ஆடிய பவுமா, அரைசதம் கடந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 129 ரன் சேர்த்த போது முகமது நபி பந்தில் பவுமா (58) அவுட்டானார். மறுமுனையில் அசத்திய ரிக்கல்டன், 101 பந்தில் சதத்தை எட்டினார். இவர் 103 ரன்னுக்கு, 'ரன்-அவுட்' ஆனார்.
பின் ஜோடி சேர்ந்த வான் டெர் துசென், மார்க்ரம் கைகொடுத்தனர். ரஷித் கான் பந்தை சிக்சருக்கு அனுப்பிய துசென், அரைசதம் அடித்தார். நான்காவது விக்கெட்டுக்கு 47 ரன் சேர்த்த போது நுார் அகமது பந்தில் துசென் (52) அவுட்டானார். நுார் அகமது வீசிய 47 வது ஓவரில் வரிசையாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய மார்க்ரம், பரூக்கி ஓவரில் 3 பவுண்டரி விரட்டினார். டேவிட் மில்லர் (14), மார்கோ யான்சன் (0) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய மார்க்ரம், 33 பந்தில் அரைசதம் எட்டினார்.
அடுத்து வந்த வியான் முல்டர், பரூக்கி வீசிய கடைசி ஓவரில் வரிசையாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 315 ரன் எடுத்தது. மார்க்ரம் (52), முல்டர் (12) அவுட்டாகாமல் இருந்தனர். ஆப்கானிஸ்தான் சார்பில் நபி 2 விக்கெட் கைப்பற்றினார்.
ரஹ்மத் ஆறுதல்: கடின இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மானுல்லா குர்பாஸ் (10), இப்ராஹிம் ஜத்ரன் (17), செடிகுல்லா அடல் (16) ஏமாற்றினர். கேப்டன் ஹஷ்மதுல்லா ஷகிதி 'டக்-அவுட்' ஆனார். அஸ்மதுல்லா ஓமர்ஜாய் (18), முகமது நபி (8), குல்பதின் நைப் (13), ரஷித் கான் (18) நிலைக்கவில்லை. தனிநபராக போராடிய ரஹ்மத் ஷா அரைசதம் கடந்தார். இவர், 90 ரன்னில் ரபாடா 'வேகத்தில்' வெளியேறினார்.
ஆப்கானிஸ்தான் அணி 43.3 ஓவரில் 208 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட் சாய்த்தார்.