/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இங்கிலாந்தை வென்றது இலங்கை: ஓவல் டெஸ்டில் அதிர்ச்சி
/
இங்கிலாந்தை வென்றது இலங்கை: ஓவல் டெஸ்டில் அதிர்ச்சி
இங்கிலாந்தை வென்றது இலங்கை: ஓவல் டெஸ்டில் அதிர்ச்சி
இங்கிலாந்தை வென்றது இலங்கை: ஓவல் டெஸ்டில் அதிர்ச்சி
ADDED : செப் 09, 2024 11:38 PM

ஓவல்: ஓவல் டெஸ்டில் நிசங்கா சதம் கைகொடுக்க, இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற இங்கிலாந்து 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது.
மூன்றாவது டெஸ்ட் லண்டன், ஓவல் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 325, இலங்கை 263 ரன் எடுத்தன. இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 156 ரன் எடுத்தது. பின், 219 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 3ம் நாள் முடிவில் 94/1 ரன் எடுத்திருந்தது.
நான்காம் நாள் ஆட்டத்தில் அட்கின்சன் 'வேகத்தில்' குசால் மெண்டிஸ் (39) வெளியேறினார். பொறுப்பாக ஆடிய பதும் நிசங்கா, 107 பந்தில் சதம் கடந்தார். பஷீர் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய நிசங்கா வெற்றியை உறுதி செய்தார். இலங்கை அணி 2வது இன்னிங்சில் 219/2 ரன் எடுத்து வெற்றி பெற்றது. நிசங்கா (127), மாத்யூஸ் (32) அவுட்டாகாமல் இருந்தனர்.
இங்கிலாந்து அணி 2-1 என கோப்பை வென்றது. ஆட்ட நாயகன் விருதை பதும் நிசங்கா வென்றார். தொடர் நாயகன் விருதை இங்கிலாந்தின் ஜோ ரூட் (375 ரன், ஒரு விக்கெட்) கைப்பற்றினார்.
10 ஆண்டுகளுக்கு பின்...
ஓவல் டெஸ்டில் வென்ற இலங்கை அணி, இங்கிலாந்து மண்ணில் 10 ஆண்டுகளுக்கு பின் முதல் டெஸ்ட் வெற்றி பெற்றது. கடைசியாக 2014ல் நடந்த லீட்ஸ் டெஸ்டில், 100 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதன்பின் இங்கு இலங்கை அணி விளையாடிய 5 டெஸ்டில், ஒரு 'டிரா', 4 தோல்வியை பெற்றது. தவிர இது, இங்கிலாந்து மண்ணில் இலங்கைக்கு கிடைத்த 4வது டெஸ்ட் வெற்றியானது.
சிறந்த 'சேஸ்'
இரண்டாவது இன்னிங்சில் 219 ரன்னை எட்டிய இலங்கை அணி, இங்கிலாந்து மண்ணில் அதிக ரன்னை 'சேஸ்' செய்த ஆசிய அணியானது. இதற்கு முன், 2010ல் நடந்த லீட்ஸ் டெஸ்டில், ஆஸ்திரேலியா நிர்ணயித்த 180 ரன்னை பாகிஸ்தான் எட்டியது சாதனையாக இருந்தது.