/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இலங்கை இமாலய வெற்றி: ஓமன் அணியை வீழ்த்தியது
/
இலங்கை இமாலய வெற்றி: ஓமன் அணியை வீழ்த்தியது
ADDED : பிப் 12, 2026 10:40 PM

பல்லேகெலே: 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணி, 105 ரன் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தியது.
இலங்கையின் பல்லேகெலேயில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் இலங்கை, ஓமன் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஓமன் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
இலங்கை அணிக்கு கமில் மிஷ்ரா (8), பதும் நிசங்கா (13) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. பின் இணைந்த குசால் மெண்டிஸ், பவன் ரத்னாயகே ஜோடி கைகொடுத்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு 94 ரன் சேர்த்த போது பவன் (60) அவுட்டானார். குசால் மெண்டிஸ், சர்வதேச 'டி-20' அரங்கில் தனது 19வது அரைசதத்தை பதிவு செய்தார்.
ஷனகா அபாரம்: கேப்டன் தசுன் ஷனகா, 19 பந்தில் அரைசதம் எட்டினார். ஜிதேன் பந்தில் ஷனகா (50) ஆட்டமிழந்தார். குசால் மெண்டிஸ் (61) 'ரன்-அவுட்' ஆனார். அடுத்து வந்த கமிந்து மெண்டிஸ், ஷா பைசல் வீசிய கடைசி ஓவரில் 2 சிக்சர் விளாசினார்.
இலங்கை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 225 ரன் எடுத்தது. கமிந்து (19), துனித் வெல்லாலகே (6) அவுட்டாகாமல் இருந்தனர்.
நதீம் ஆறுதல்: கடின இலக்கை விரட்டிய ஓமன் அணிக்கு கேப்டன் ஜிதேந்தர் சிங் (1), ஹம்மத் மிர்சா (9) ஏமாற்றினர். வாசிம் அலி (27) ஆறுதல் தந்தார். முகமது நதீம் அரைசதம் கடந்தார். ஓமன் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 120 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. நதீம் (54) அவுட்டாகாமல் இருந்தார்.
ஆட்ட நாயகன் விருதை பவன் ரத்னாயகே வென்றார்.
முதல் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய இலங்கை அணி, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தது.
2வது அதிகபட்சம்
சர்வதேச 'டி-20' அரங்கில் தனது 2வது அதிகபட்ச ஸ்கோரை (225/5) பதிவு செய்தது இலங்கை. கடந்த 2007ல் கென்யாவுக்கு எதிராக 260/6 ரன் குவித்தது இலங்கையின் அதிகபட்ச ரன்னாக உள்ளது.
105 ரன்னில்...
சர்வதேச 'டி-20' அரங்கில் அதிக ரன் வித்தியாசத்தில் தனது 2வது இமாலய வெற்றியை (105 ரன்னில்) பெற்றது இலங்கை. இதற்கு முன், 2007ல் கென்யாவுக்கு எதிராக 172 ரன்னில் வென்றது இலங்கையில் 'மெகா' வெற்றியாக உள்ளது.
அதிவேக அரைசதம்
சர்வதேச 'டி-20'ல் அதிவேக அரைசதம் (19 பந்தில்) விளாசிய இலங்கை வீரரானார் தசுன் ஷனகா. இதற்கு முன் இவர், 20 பந்தில் (எதிர்: இந்தியா, 2023, புனே) அரைசதம் எட்டினார்.

