இலங்கை அணி ரன் குவிப்பு: மெண்டிஸ், கருணாரத்னே அரைசதம்
இலங்கை அணி ரன் குவிப்பு: மெண்டிஸ், கருணாரத்னே அரைசதம்
ADDED : மார் 30, 2024 10:10 PM

சாட்டோகிராம்: வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் இலங்கையின் குசால் மெண்டிஸ், கருணாரத்னே, நிஷான் மதுஷ்கா அரைசதம் கடந்தனர்.
வங்கதேசம் சென்றுள்ள இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இலங்கை வென்றது. சாட்டோகிராமில் 2வது டெஸ்ட் நடக்கிறது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இலங்கை அணிக்கு நிஷான் மதுஷ்கா, திமுத் கருணாரத்னே ஜோடி நல்ல துவக்கம் தந்தது. பொறுப்பாக ஆடிய மதுஷ்கா, 80 பந்தில் அரைசதம் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 96 ரன் சேர்த்த போது மதுஷ்கா (57) 'ரன்-அவுட்' ஆனார். கலீத் அகமது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கருணாரத்னே, டெஸ்ட் அரங்கில் தனது 37வது அரைசதத்தை பதிவு செய்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த குசால் மெண்டிஸ் தன்பங்கிற்கு அரைசதம் விளாசினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 114 ரன் சேர்த்த போது ஹசன் மஹ்மூத் பந்தில் கருணாரத்னே (86) போல்டானார். ஹசன் மஹ்மூத் வீசிய 62வது ஓவரில் 3 பவுண்டரி விரட்டிய குசால் மெண்டிஸ் (93), சாகிப் அல் ஹசன் 'சுழலில்' சிக்கினார்.
அனுபவ மாத்யூஸ் (23) சோபிக்கவில்லை. பின் இணைந்த தினேஷ் சண்டிமால், கேப்டன் தனஞ்செயா டி சில்வா ஜோடி நிதானமாக விளையாடியது. ஆட்டநேர முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 314 ரன் எடுத்திருந்தது. சண்டிமால் (34), தனஞ்செயா (15) அவுட்டாகாமல் இருந்தனர். வங்கதேசம் சார்பில் ஹசன் மஹ்மூத் 2 விக்கெட் வீழ்த்தினார்.
