/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சுப்மன் கில் சதம்: இந்தியா அபாரம்
/
சுப்மன் கில் சதம்: இந்தியா அபாரம்
UPDATED : பிப் 04, 2024 11:09 PM
ADDED : பிப் 04, 2024 11:05 PM

விசாகப்பட்டனம்: இரண்டாவது டெஸ்டில் சுப்மன் கில் சதம் விளாச, இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. இங்கிலாந்துக்கு கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் விசாகப்பட்டனத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 396, இங்கிலாந்து 253 ரன் எடுத்தன. இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 28 ரன் எடுத்திருந்தது.
ஆண்டர்சன் அசத்தல்
மூன்றாவது நாள் ஆட்டத்தில் முதல் அரை மணி நேரத்திற்கு 41 வயதான ஆண்டர்சன் மிரட்டினார். இவரது 'வேகத்தில்' கேப்டன் ரோகித் சர்மா(13) போல்டானார். ஜெய்ஸ்வால், 17 ரன்னுக்கு ஆண்டர்சன் பந்தில் வீழ்ந்தார். பின் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் நம்பிக்கை தந்தனர். 3வது விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்தனர்.
ஸ்டோக்ஸ் 'கேட்ச்'
இந்த நேரத்தில் ஹார்ட்லி பந்தை வீணாக துாக்கி அடித்தார் ஸ்ரேயாஸ்(29). இதை நீண்ட துாரம் ஓடிச் சென்று அருமையாக பிடித்தார் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ். அடுத்து வந்த ரஜத் படிதார்(9) விரைவில் அவுட்டாக, இந்தியா 4 விக்கெட்டுக்கு 122 ரன் எடுத்து தவித்தது. உறுதியாக ஆடிய சுப்மன் அணியை மீட்டார். அரைசதம் கடந்ததும் அதிரடிக்கு மாறினார். ரேஹன் ஓவரில் வரிசையாக ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்தார். இவருக்கு அக்சர் படேல் ஒத்துழைக்க, ஸ்கோர் உயர்ந்தது. இருவரும் 5வது விக்கெட்டுக்கு 89 ரன் சேர்த்தனர்.
சுப்மன் சதம்
பஷிர் பந்தில் ஒரு ரன் எடுத்த சுப்மன், சதம் எட்டினார். இவர் 104 ரன்னுக்கு(11 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட்டானார். அக்சர், 45 ரன் எடுத்தார். பரத்(6) நிலைக்கவில்லை. அஷ்வின்(29) ஓரளவுக்கு கைகொடுக்க, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 255 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்துக்கு 399 ரன்னை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இங்கிலாந்து தரப்பில் ஹார்ட்லி 4, ரேஹன் 3, ஆண்டர்சன் 2 விக்கெட் வீழ்த்தினர்.
நல்ல துவக்கம்
கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு கிராலே, டக்கெட் நல்ல அடித்தளம் அமைத்தனர். முதல் விக்கெட்டுக்கு 50 ரன் சேர்த்த நிலையில், அஷ்வின் பந்தில் டக்கெட்(28) அவுட்டானார். மூன்றாவது நாள் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 67 ரன் எடுத்திருந்தது. கிராலே(29), ரேஹன் அகமது(9) அவுட்டாகாமல் இருந்தனர்.
இங்கிலாந்து வெற்றிக்கு இன்னும் 332 ரன் தேவை. கிராலே, போப், ஸ்டோக்ஸ் நின்று ஆடினால், சிக்கல் ஏற்படும். இதனை உணர்ந்து இந்திய வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசினால், வெற்றியை வசப்படுத்தலாம்.