/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
திருப்பம் தந்த சூர்யகுமார் 'கேட்ச்'
/
திருப்பம் தந்த சூர்யகுமார் 'கேட்ச்'
ADDED : ஜூன் 30, 2024 11:44 PM

கிரிக்கெட்டில் 'கேட்ச்சஸ் வின் மேட்ச்சஸ்' என்பர். உலக கோப்பை பைனலின் சூர்யகுமாரின் கலக்கல் 'கேட்ச்', இந்திய அணியின் உலக கோப்பை கனவை நனவாக்கியது.
கடைசி ஓவரின் முதல் பந்தை ஹர்திக் பாண்ட்யா, 'வைடு புல் டாசாக' வீசினார். இதை 'லாங் ஆப்' திசை நோக்கி மில்லர் துாக்கி அடிக்க, 20 மீட்டர் துாரம் ஓடி வந்த சூர்யகுமார் தட்டுத்தடுமாறி பிடித்தார். சுதாரித்த இவர், எல்லைக் கோட்டை தொடாமல் பந்தை மேலே எறிந்தார். பின் பவுண்டரியை கடந்து சென்று, மீண்டும் மைதானத்துக்குள் வந்து 'கேட்ச்' செய்தார். மில்லர் அவுட்டானார். சூர்யகுமார் ஆசைப்பட்டது போல் இந்தியா உலக கோப்பை வென்றது. இவருக்கு சிறந்த பீல்டருக்கான விருதை பி.சி.சி.ஐ., செயலர் ஜெய் ஷா வழங்கினார்.
வரலாற்று சிறப்புமிக்க இவரது 'கேட்ச்சை', 1983, உலக கோப்பை பைனலில் அசத்திய கபில்தேவின் 'கேட்ச்' உடன் ஒப்பிடுகின்றனர். அப்போது வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ் அடித்த பந்தை நீண்ட துாரம் ஓடிச் சென்று பிடித்த கபில், இந்தியாவுக்கு முதல் உலக கோப்பை பெற்றுத் தந்தார்.
வீண் சர்ச்சை
இதற்கிடையே தென் ஆப்ரிக்க ரசிகர் ஒருவர், 'சூர்யகுமார் கேட்ச் செய்த போது அவரது கால், எல்லை கோட்டை தொட்டது. வீடியோவின் இன்னொரு கோணத்தை பார்க்க மூன்றாவது அம்பயர் தவறிவிட்டார். இந்தியா 7 ரன்னில் தான் வென்றது. ஒருவேளை மில்லர் அடித்த பந்து, சிக்சராகி இருந்தால் நிலைமை மாறியிருக்கும்,' என சமூகவலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு இந்திய ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'அனுபவ மூன்றாவது அம்பயர் கெட்டில்புரோ பல முறை 'ரீப்ளே' பார்த்துவிட்டு தான் 'கேட்ச்' என்பதை உறுதி செய்தார். ஆதாரமில்லாத புகாரை சொல்ல வேண்டாம்,' என பதிலடி கொடுத்துள்ளனர்.

