/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'டி-20' சரவெடி: சாதிக்குமா இந்தியா
/
'டி-20' சரவெடி: சாதிக்குமா இந்தியா
ADDED : ஜன 21, 2025 10:58 PM

கோல்கட்டா: டெஸ்ட் தோல்வியால் துவண்டு போன இந்திய ரசிகர்களை தட்டி எழுப்ப, 'டி-20' தொடர் இன்று ஆரம்பமாகிறது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து 'டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. அடுத்து சென்னை (ஜன. 25), ராஜ்கோட் (ஜன. 28), புனே (ஜன. 31), மும்பையில் (பிப். 2) போட்டிகள் நடக்க உள்ளன.
சாம்சன் எதிர்பார்ப்பு: இந்திய அணியை பொறுத்தவரை கடந்த மூன்று மாதங்களாக டெஸ்டில் தோல்வி மேல் தோல்வியை சந்தித்தது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களை இழந்தது. இதற்கு 'டி-20' தொடரில் பரிகாரம் தேடலாம். கேப்டனாக சூர்யகுமார் களமிறங்குகிறார். 'மிஸ்டர் 360 டிகிரி' என அழைக்கப்படும் இவர், மைதானத்தின் நாலாபுறமும் பந்தை விளாசும் திறன் பெற்றவர். துணை கேப்டனாக அவதாரம் எடுக்கிறார் குஜராத்தின் 'ஸ்பின்' ஆல்-ரவுண்டர் அக்சர் படேல். சாம்பியன்ஸ் டிராபிக்கு புறக்கணிக்கப்பட்ட கீப்பர், பேட்டர் சஞ்சு சாம்சன், துவக்க வீரராக வரலாம். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 'டி-20' தொடரில் சதங்களாக விளாசிய இவர், மீண்டும் மிரட்டலாம். மெல்போர்ன் டெஸ்டில் (எதிர், ஆஸி.,) சதம் அடித்த நிதிஷ் குமார், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, 'ஆல்-ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங் என பேட்டிங் படை நீள்கிறது.
வரமாக ஷமி: கணுக்கால் காயத்தில் இருந்து மீண்ட 'வேகப்புயல்' ஷமி, 14 மாத இடைவெளிக்கு பின் இந்திய அணிக்காக களமிறங்குகிறார். உடற்தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். பும்ரா இடம் பெறாத நிலையில், இவர் மீதான சுமை அதிகரித்துள்ளது. அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், பிஷ்னோய் பலம் சேர்க்கின்றனர்.
மெக்கலம் 'பார்முலா': ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியில் டாப்ளே, சாம் கர்ரான், வில் ஜாக்ஸ் இடம் பெறாததது பலவீனம். இளம் ஜேக்கப் பெத்தல் நம்பிக்கை தருகிறார். டெஸ்டில் துவக்க வீரரான பென் டக்கெட், பில் சால்ட் லிவிங்ஸ்டன் வாய்ப்பு பெற்றுள்ளனர். ஷமியை போல காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர். இவருடன் மார்க் உட், அட்கின்சன், அடில் ரஷித் அசத்தலாம். டெஸ்டில் அதிரடியாக ரன் சேர்க்கும் 'பாஸ் பால்' முறையை அறிமுகம் செய்து வெற்றி கண்டவர் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம். தற்போது 'டி-20' போட்டிக்கும் பயிற்சியாளராக உள்ளார். இவரது விளாசல் புரட்சியை 'டி-20' அரங்கிலும் இங்கிலாந்து வீரர்கள் பின்பற்றலாம்.
அர்ஷ்தீப் '100'
அர்ஷ்தீப் சிங் தற்போது 95 விக்கெட் (60 போட்டி) வீழ்த்தியுள்ளர். இன்னும் 2 விக்கெட் கைப்பற்றினால், அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரராகலாம். சகாலை (80 போட்டி, 96 விக்.,) முந்தலாம்.
* அர்ஷ்தீப் சிங் இன்னும் 5 விக்கெட் வீழ்த்தினால், சர்வதேச 'டி-20' அரங்கில் 100 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைக்கலாம். அதிவேகமாக இம்மைல்கல்லை எட்டலாம். முன்னதாக பாகிஸ்தானின் ஹாரிஸ் ராப் 71வது போட்டியில் 100 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.
* சூர்யகுமார், 78 'டி-20' போட்டியில் 145 சிக்சர் அடித்துள்ளார். இன்னும் 5 சிக்சர் அடித்தால், அதிவேகமாக 150 சிக்சர் அடித்து சாதனை படைக்கலாம். நியூசிலாந்தின் கப்டில் (105 போட்டி) சாதனையை தகர்க்கலாம்.
அழகான பயணம்...
சூர்யகுமார் கூறுகையில்,''2014ல் கோல்கட்டா அணிக்காக விளையாட ஈடன் கார்டன் மைதானத்திற்கு முதல் முறையாக வந்தேன். 10-11 ஆண்டு இடைவெளியில் இந்திய அணியின் கேப்டனாக வருவேன் என ஒரு போதும் நினைத்தது இல்லை. இது ஒரு அழகான பயணம்,''என்றார்.
யார் ஆதிக்கம்
ஈடன் கார்டன் ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமானது. போகப் போக 'ஸ்பின்னர்'களுக்கு ஒத்துழைக்கும். இரவில் பனிப் பொழிவு, பவுலர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
* இங்கு இந்திய அணி பங்கேற்ற 7 'டி-20' போட்டியில் 6ல் வென்றது. இங்கிலாந்திடம் (2011) மட்டும் தோற்றது.
* இரு அணிகளும் 24 முறை 'டி-20' போட்டியில் மோதின. இந்தியா 13, இங்கிலாந்து 11ல் வென்றன.
* கோல்கட்டாவில் வானம் தெளிவாக இருக்கும். மழைக்கு வாய்ப்பு இல்லை.