ADDED : மே 02, 2026 10:21 PM

மும்பை: 'டி-20' உலக கோப்பை தொடருக்கான இந்திய பெண்கள் அணியில் ராதா யாதவ், யஷ்திகா, நந்தினி இடம் பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து, வேல்சில், பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை 10வது சீசன் (ஜூன் 12 - ஜூலை 5) நடக்கவுள்ளது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி, 'ஏ' பிரிவில் பாகிஸ்தான் (ஜூன் 14), நெதர்லாந்து (ஜூன் 17), தென் ஆப்ரிக்கா (ஜூன் 21), வங்கதேசம் (ஜூன் 25), ஆஸ்திரேலியா (ஜூன் 28) அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. பைனல், ஜூலை 5ல் லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.
மும்பையில் இத்தொடருக்கான இந்திய அணித்தேர்வு நடந்தது. இதில் தேர்வுக்குழு தலைவர் அமிதா சர்மா, தலைமை பயிற்சியாளர் அமோல் மஜும்தார், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், பி.சி.சி.ஐ., செயலர் தேவஜித் சைகியா பங்கேற்றனர். முடிவில், 15 பேர் கொண்ட அணியை அமிதா சர்மா அறிவித்தார்.
கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர், துணை கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நீடிக்கின்றனர். சமீபத்திய தென் ஆப்ரிக்க தொடரில் காயமடைந்த அமன்ஜோத் கவுர் இடம் பெறவில்லை. இதேபோல தென் ஆப்ரிக்க தொடரில் பங்கேற்ற அனுஷ்கா சர்மா, உமா செத்ரிக்கு இடம் கிடைக்கவில்லை.
காயத்தில் இருந்து மீண்ட விக்கெட் கீப்பர் பேட்டர் யஷ்திகா பாட்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தில் நடந்த 'ரைசிங் ஸ்டார்ஸ்' ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு சாம்பியன் பட்டம் வென்று தந்த ராதா யாதவ் தேர்வானார்.
புதுமுக வீராங்கனையாக வேகப்பந்துவீச்சாளர் நந்தினி சர்மா இடம் பெற்றுள்ளார். கடந்த பெண்கள் பிரிமியர் லீக் தொடரில் டில்லி அணி சார்பில் பங்கேற்ற இவர், அதிகபட்சமாக 17 விக்கெட் சாய்த்தார்.
இந்திய அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷைபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங், கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி, ஷ்ரேயங்கா பாட்டீல், பாரதி புல்மாலி, யஷ்திகா பாட்யா (விக்கெட் கீப்பர்), நந்தினி சர்மா, ராதா யாதவ்.
தவிர, இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் (மே 28, 30, ஜூன் 2) கொண்ட 'டி-20' தொடரில், உலக கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்ட அணியே, விளையாடும்.
