151 'சிக்சர்' விளாசிய பூரன் * 'டி-20' அரங்கில் சாதனை
151 'சிக்சர்' விளாசிய பூரன் * 'டி-20' அரங்கில் சாதனை
ADDED : செப் 24, 2024 10:56 PM

தரவுபா: 'டி-20' அரங்கில் ஒரே ஆண்டில் 150 சிக்சர் அடித்த உலகின் முதல் வீரர் ஆனார் பூரன்.
வெஸ்ட் இண்டீசில் கரீபியன் பிரிமியர் லீக் 'டி-20' தொடர் நடக்கிறது. லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ், செயின்ட் கிட்ஸ் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய செயின்ட் கிட்ஸ் அணிக்கு கேப்டன் பிளட்சர் (93), கைல் மேயர்ஸ் (60) கைகொடுத்தனர். 20 ஓவரில் செயின்ட் கிட்ஸ் அணி, 4 விக்கெட்டுக்கு 194 ரன் எடுத்தது. டிரின்பாகோ அணியின் கிறிஸ் ஜோர்டான் 2 விக்கெட் சாய்த்தார்.
பூரன் விளாசல்
கடின இலக்கைத் துரத்திய டிரின்பாகோ அணிக்கு ஜேசன் ராய், நிகோலஸ் பூரன் இணைந்து சிக்சர் மழை பொழிந்தனர். ராய் 34 பந்தில் 64 ரன் எடுத்தார். பூரன் அரைசதம் விளாச, வெற்றி எளிதானது.
டிரின்பாகோ அணி 18.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 197 ரன் எடுத்து, 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது. பூரன் (93 ரன், 43 பந்து), கேப்டன் போலார்டு (10) அவுட்டாகாமல் இருந்தனர்.
புதிய சாதனை
இப்போட்டியில் பூரன் 7 சிக்சர் அடித்தார். இதையடுத்து 'டி-20' கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 150 சிக்சர் அடித்த உலகின் முதல் வீரர் ஆனார். இவர் 63 இன்னிங்சில் இதுவரை 151 சிக்சர் அடித்துள்ளார். முன்னதாக வெஸ்ட் இண்டீசின் கெய்ல் 2015ல் 36 இன்னிங்சில், 135 சிக்சர் அடித்து இருந்தார்.
2022 ரன்
'டி-20' அரங்கில் ஒரு ஆண்டில் 2000 ரன் எடுத்த, இரண்டாவது வீரர் ஆனார் பூரன். இவர், 63 இன்னிங்சில் 2022 ரன் எடுத்துள்ளார். பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 2021ல் 48 இன்னிங்சில் 2036 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார். அலெக்ஸ் ஹேல்ஸ் (61ல் 1946 ரன், 2022) 3வது இடத்தில் உள்ளார்.
நான்காவது இடம்
சர்வதேசம், உள்ளூர் என ஒட்டுமொத்த 'டி-20' அரங்கில் பூரன், இதுவரை 563 சிக்சர் (361 போட்டி) அடித்து, 4வது இடத்தில் உள்ளார். முதல் மூன்று இடத்திலும் வெஸ்ட் இண்டீசின் கெய்ல் (463ல் 1056), போலார்டு (683ல் 892), ரசல் (522ல் 709) உள்ளனர்.
