ADDED : ஜூன் 21, 2024 10:32 PM

ஆன்டிகுவா: 'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8' போட்டியில் இன்று இந்தியா, வங்கதேச அணிகள் மோதுகின்றன.
வெஸ்ட் இண்டீசில் 'டி-20' உலக கோப்பை தொடரின் 'சூப்பர்-8' போட்டி நடக்கின்றன. 'பிரிவு 1' ல் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை சாய்த்தது.
இன்று இரண்டாவது போட்டியில் வங்கதேசத்துடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இதில் வெற்றி பெற்றால் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லலாம். துவக்கத்தில் கேப்டன் ரோகித் (52, 13, 3, 8), கோலி (1, 4, 0, 24) எழுச்சி பெற்றால் நல்லது. 'மிடில் ஆர்டரில்' ரிஷாப் பன்ட் (36, 42, 18, 20), சூர்யகுமார் (2, 7, 50, 53) நம்பிக்கை தருகின்றனர். ஷிவம் துபே (0, 3, 31, 10) ஏமாற்றம் தொடர்கிறது. ஹர்திக் பாண்ட்யா கைகொடுக்கிறார்.
பவுலிங்கில் பும்ரா (8 விக்.,), அர்ஷ்தீப் சிங் (10) கூட்டணி சாய்ப்பது பலம். சுழலில் அக்சர் படேல், குல்தீப் ஜோடியுடன், 'சீனியர்' ஜடேஜாவும் உதவ காத்திருக்கிறார்.
கட்டாய வெற்றி
வங்கதேச அணி முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இன்று கட்டாயம் வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க முடியும். லிட்டன் தாஸ், சாகிப் அல் ஹசன், மகமதுல்லா தொடர்ந்து சொதப்புவது, கேப்டன் நஜ்முல் ஷாண்டோவுக்கு சிக்கல் தருகிறது. பவுலிங்கில் அனுபவ முஸ்தபிஜூர் இருப்பது பலம்.