/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தமிழக அணி முன்னிலை: கூச் பெஹர் டிராபியில்
/
தமிழக அணி முன்னிலை: கூச் பெஹர் டிராபியில்
ADDED : டிச 23, 2024 10:05 PM

தேனி: கூச் பெஹர் டிராபி காலிறுதியில் தமிழக அணி வலுவான முன்னிலை பெற்றது.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான கூச் பெஹர் டிராபி (4 நாள் போட்டி) தொடர் நடத்தப்படுகிறது. தேனியில் உள்ள தமிழக கிரிக்கெட் சங்க (டி.என்.சி.ஏ.,) அகாடமி மைதானத்தில் நடக்கும் காலிறுதியில் தமிழகம், பஞ்சாப் அணிகள் விளையாடுகின்றன. தமிழக அணி முதல் இன்னிங்சில் 281 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுக்கு 55 ரன் எடுத்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு ரேவன் (52), தேவ் அம்ரித்பால் சிங் (42) நம்பிக்கை தந்தது. பஞ்சாப் அணி முதல் இன்னிங்சில் 193 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. தமிழகம் சார்பில் கிஷோர் 4, ஹெம்சுதேஷன் 3, சச்சின் 2 விக்கெட் சாய்த்தனர்.
பின் 2வது இன்னிங்சை துவக்கிய தமிழக அணிக்கு நவின் (0), ஆன்ட்ரி சித்தார்த் (1), அம்பிரிஷ் (2), ஸ்ரேனிக் (2) ஏமாற்றினர். ராகவ் (23) ஆறுதல் தந்தார். பொறுப்பாக ஆடிய கேப்டன் அபினவ் கண்ணன், பிரவின் அரைசதம் கடந்தனர்.
ஆட்டநேர முடிவில் தமிழக அணி 2வது இன்னிங்சில் 171/6 ரன் எடுத்து, 259 ரன் முன்னிலை பெற்றிருந்தது. அபினவ் (76), பிரவின் (55) அவுட்டாகாமல் இருந்தனர். பஞ்சாப் சார்பில் ஷுபம் ராணா 4, கர்வ் குமார் 2 விக்கெட் வீழ்த்தினர்.