/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஆடாம ஜெயிச்ச ரூ.1 கோடி * உலக கோப்பை பரிசு கணக்கு
/
ஆடாம ஜெயிச்ச ரூ.1 கோடி * உலக கோப்பை பரிசு கணக்கு
ADDED : ஜூலை 08, 2024 10:59 PM

புதுடில்லி: 'டி-20' உலக கோப்பை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு தலா ரூ. 5 கோடி பரிசு கிடைத்துள்ளது.
வெஸ்ட் இண்டீசில் நடந்த 'டி-20' உலக கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் ஆனது. ஐ.சி.சி., சார்பில் இந்தியாவுக்கு ரூ. 20.37 கோடி பரிசு வழங்கப்பட்டது.
தவிர இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.) சார்பில் ரூ. 125 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது. தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு மும்பை வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது. இதில் வீரர்களுக்கான பரிசு வழங்கப்பட்டது.
இதனிடையே ஒவ்வொரு வீரருக்கும் எவ்வளவு பரிசு என்ற விபரம் நேற்று வெளியானது. இதன் படி இந்திய வீரர்கள் 15 பேர், பயிற்சியாளர் டிராவிட் என 16 பேருக்கு தலா ரூ. 5 கோடி கிடைத்துள்ளது. பேட்டிங், பவுலிங் உள்ளிட்ட மற்ற பயிற்சியார்களுக்கு தலா ரூ. 2.5 கோடி கிடைத்துள்ளது.
மருத்துவ, மற்ற உதவியாளர்கள் தலா ரூ. 2 கோடி பெற்றனர். இந்திய அணியை தேர்வு செய்த தேர்வுக்குழு தலைவர் அகார்கர், உறுப்பினர்கள் ஷிவ்சுந்தர் தாஸ், சுப்ரதோ பானர்ஜி, சலில் அங்கோலா, ஸ்ரீதரன் ஷரத் என 5 பேருக்கு தலா ரூ. 1 கோடி கிடைத்தது. விளையாடாமல் அணியில் 'ரிசர்வ்' வீரர்களாக இருந்த ரிங்கு சிங், கலீல் அகமது உள்ளிட்டோருக்கு தலா ரூ. 1 கோடி கிடைத்தது.
தவிர மகாராஷ்டிரா மாநில அரசு சார்பில் இந்திய அணிக்கு ரூ. 11 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
1983 வீரர்களுக்கு ரூ. 25,000
கடந்த 1983ல் இந்தியா முதன் முதலில் உலக சாம்பியன் (ஒருநாள் கிரிக்கெட்) ஆனது. அப்போதைய கபில்தேவ் தலைமையான வீரர்கள் ஒவ்வொருக்கும், ரூ. 25,000 வழங்கப்பட்டன. தற்போது உலக பணக்கார கிரிக்கெட் அமைப்பான பி.சி.சி.ஐ., ரூ. 5 கோடி தந்துள்ளது.