ADDED : ஆக 27, 2026 09:51 PM

சென்னை: டி.என்.பி.எல்., பைனலில் மதுரை, கோவை அணிகள் மோதுகின்றன.
டி.என்.பி.எல்., கிரிக்கெட் 10வது சீசன் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற லீக் சுற்றின் முடிவில், 'டாப்-4' இடம் பிடித்த மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின. இதில் தகுதிச் சுற்று-1 போட்டி மழையால் ரத்தாக, புள்ளிப்பட்டியில் முதலிடம் பிடித்த மதுரை அணி நேரடியாக பைனலுக்குள் நுழைந்தது. அடுத்து நடந்த 'எலிமினேட்டர்' போட்டியும் மழையால் பாதிக்க, 3வது இடம் பிடித்த கோவை அணி, தகுதிச் சுற்று-2ல் விளையாட தகுதி பெற்றது. இதில் கோவை அணி 94 ரன் வித்தியாசத்தில் திருச்சி அணியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது.
சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள பைனலில் (ஆக. 28) மதுரை, கோவை அணிகள் விளையாடுகின்றன. மதுரை அணிக்கு பேட்டிங்கில் அதீக் உர் ரஹ்மான் (212 ரன்), சதுர்வேத் (209), சித்தார்த் மகாதேவன் (160) நம்பிக்கை தருகின்றனர். பவுலிங்கில் குர்ஜப்னீத் சிங் (8 விக்கெட்), ஷோயப் முகமது கான் (7), கணேசன் பெரியசாமி (7) கைகொடுக்கின்றனர்.
கோவை அணிக்கு பேட்டிங்கில் சச்சின் பாலசுப்ரமணியம் (389 ரன்), சுரேஷ் லோகேஷ்வர் (253), கேப்டன் ஷாருக்கான் (211) பலம் சேர்க்கின்றனர். பவுலிங்கில் தீபன் லிங்கேஷ் (15 விக்கெட்), சித்தார்த் மணிமாறன் (13), ஜாதவேத் சுப்ரமணியன் (13) அசத்துகின்றனர்.
பைனலில் வெற்றி பெறும் அணி 2வது முறையாக கோப்பை வெல்லலாம். ஏற்கனவே மதுரை (2018), கோவை (2023) தலா ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்றிருந்தன.
