/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோவை முதல் வெற்றி * வீழ்ந்தது சேப்பாக்கம்
/
கோவை முதல் வெற்றி * வீழ்ந்தது சேப்பாக்கம்
UPDATED : ஜூலை 05, 2024 11:13 PM
ADDED : ஜூலை 05, 2024 10:07 PM

சேலம்: டி.என்.பி.எல்., தொடரின் முதல் போட்டியில் கோவை அணி 13 ரன் வித்தியாசத்தில் சேப்பாக்கத்தை வென்றது.
தமிழகத்தில் டி.என்.பி.எல்., 'டி-20' தொடரின் 8வது சீசன் நேற்று துவங்கியது. வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த முதல் மோதலில் நடப்பு சாம்பியன் கோவை, சேப்பாக்கம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 'டாஸ்' வென்ற சேப்பாக்கம் அணி பீல்டிங் தேர்வு செய்தது.
கோவை அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அபிஷேக் தன்வர் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் சுரேஷ் குமார் (4) அவுட்டானார். தொடர்ந்து மிரட்டிய அபிஷேக், அடுத்த ஓவரில், சுஜாயை (6) வெளியேற்றினார். கேப்டன் ஷாருக்கான் (8) ரன் அவுட்டானார். முகிலேஷ், 31 ரன் எடுத்தார். பெரியசாமி பந்தில் ராம் அர்விந்த் (12) அவுட்டானார்.
உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாலசுப்ரமணியம், 53 பந்தில் 63 ரன் எடுத்து கடைசி பந்தில் அவுட்டானார். கோவை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 141 ரன் மட்டும் எடுத்தது. அபிஷேக் 4 விக்கெட் சாய்த்தார்.
அடுத்து களமிறங்கிய சேப்பாக்கம் அணிக்கு சந்தோஷ் (0), ஜெகதீசன் (18) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. கேப்டன் பாபா அபராஜித் (38) கைகொடுத்த போதும், டேரில் (2), ஜிதேந்திரா (14) ஏமாற்றினர். கடைசி ஓவரில் சேப்பாக்கம் வெற்றிக்கு 18 ரன் தேவைப்பட்டன. முகமது வீசிய இந்த ஓவரில் 4 ரன் மட்டும் எடுக்கப்பட்டன. சேப்பாக்கம் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 128 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.