/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சேலம் அணி 'திரில்' வெற்றி * திருப்பூர் ஏமாற்றம்
/
சேலம் அணி 'திரில்' வெற்றி * திருப்பூர் ஏமாற்றம்
ADDED : ஜூன் 13, 2025 11:31 PM

சேலம்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில் சேலம் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.
டி.என்.பி.எல்., தொடரின் இரண்டாவது கட்ட போட்டி சேலத்தில் நேற்று துவங்கியது. இதில் திருப்பூர், சேலம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சேலம் அணி கேப்டன் அபிஷேக் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
துஷார் விளாசல்
திருப்பூர் அணிக்கு துஷார் ரஹேஜா, அமித் சாத்விக் ஜோடி துவக்கம் கொடுத்தது. சன்னி சாந்து வீசிய 2வது ஓவரில் அமித் 1, துஷார் 2 சிக்சர் அடித்தனர். ராஹில் ஷா வீசிய போட்டியின் 5வது ஓவரின் கடைசி 4 பந்தில், 4, 6, 4, 6 என விளாசினார் துஷார். இந்த ஓவரில் 21 ரன் எடுக்கப்பட்டன.
முதல் விக்கெட்டுக்கு 6.4 ஓவரில் 73 ரன் சேர்த்த போது, அமித் (25), முகமது பந்தில் அவுட்டானார். ஹரிஷ் பந்தில் பவுண்டரி அடித்த துஷார், 16 பந்தில் அரைசதம் விளாசினார். மறுபக்கம் டேரில் பெரேரா 10 ரன் எடுத்தார். திருப்பூர் அணி 12 ஓவரில் 103/2 ரன் குவித்தது. ஹரி நிஷாந்த் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி அடித்த துஷார், 74 ரன்னில் (28 பந்து, ஸ்டிரைக் ரேட் 264.28) அவுட்டானார்.
இதன் பின் அணியின் ரன் வேகம் குறைந்தது. பொய்யாமொழி வீசிய 18 வது ஓவரில் பிரதோஷ் (25), உதிரசாமி (18) அவுட்டாகினர். கேப்டன் சாய் கிஷோர் (4) நிலைக்கவில்லை. பின் வரிசையில் மதிவாணன் (3) ஏமாற்றினார். திருப்பூர் அணி 20 ஓவரில் 177/8 ரன் எடுத்தது.
சேலம் அபாரம்
சேலம் அணிக்கு ஹரி நிஷாந்த், அபிஷேக் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. நடராஜன் வீசிய முதல் ஓவரின் 2வது பந்தில் ஹரி நிஷாந்த் 'டக்' அவுட்டானார். முகமது அலி பந்தில் அபிஷேக் (10) சிக்கினார். நிதிஷ் ராஜகோபால், கவின் இணைந்தனர். முகமது அலி பந்தில் சிக்சர் அடித்த நிதிஷ், அரைசதம் எட்டினார்.
கவின் 32 ரன்னில் அவுட்டானார். நிதிஷ் 44 பந்தில் 69 ரன் எடுத்தார். சேலம் வெற்றிக்கு 12 பந்தில் 31 ரன் தேவைப்பட்டன. இசக்கி முத்து வீசிய 19 வது ஓவரில், 25 ரன் எடுக்கப்பட, வெற்றி உறுதியானது. 20 வது ஓவரை நடராஜன் வீசினார். முதல் 5 பந்தில் 6 ரன் எளிதாக எடுக்கப்பட்டன. சேலம் அணி 19.5 ஓவரில் 178/6 ரன் எடுத்து 'திரில்' வெற்றி பெற்றது. பூபதி குமார் (19), ஹரிஷ் குமார் (23) அவுட்டாகாமல் இருந்தனர்.