ADDED : பிப் 14, 2024 09:38 PM

சென்னை: ''கடந்த 2021 உலக கோப்பை தொடருக்குப் பின் நன்றாக இருந்த போதும், காயத்தால் அவதிப்படுவதாக தொடர்ந்து தவறான செய்தி பரப்பினர்,'' என வருண் சக்ரவர்த்தி தெரிவித்தார்.
இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 32. ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணிக்காக விளையாடுகிறார். 2020ல் 17, 2021ல் 18 விக்கெட் சாய்த்தார். இதனால் 'டி-20' உலக கோப்பை (2021) அணியில் இடம் பிடித்தார். 3 போட்டியில் 1 விக்கெட்டும் சாய்க்கவில்லை. இதன் காயத்தால் இவர் அவதிப்படுவதாக செய்தி வெளியானது.
இதுகுறித்து வருண் சக்ரவர்த்தி கூறியது:
உலக கோப்பை தொடருக்கு பின் காயத்தால் நீண்ட காலம் அவதிப்பட்டதாக, தவறான செய்தியை யாரோ பரப்பினர். உண்மையில் லேசான காயம் தான் இருந்தது. மூன்று வாரத்தில் மீண்டு விட்டேன். ஆனால் நான் காயத்தில் இருப்பதாக தொடர்ந்து என்னை புறக்கணித்தனர். இது வதந்தியா அல்லது என்னைப்பற்றி யாரோ இப்படி செய்திகளை பரப்புகின்றனரா எனத் தெரியவில்லை. இது கடினமாக இருந்தது.
இதனால் என்னை நிரூபிக்க வேண்டும் என விரும்பினேன். பவுலிங்கில் பல மாற்றங்கள் கொண்டு வந்தேன். இது எனது மன அமைதியை குலைத்தது. கடைசியில் இது எனது வழக்கமான பந்துவீச்சை பாதித்தது.
இவ்வாறு அவர் கூறினார்.

