ADDED : மே 27, 2024 10:38 PM

கிங்ஸ்டன்: மூன்றாவது 'டி-20' போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 3-0 தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.
வெஸ்ட் இண்டீஸ் சென்ற தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. கிங்ஸ்டனில் மூன்றாவது போட்டி நடந்தது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த தென் ஆப்ரிக்க அணிக்கு குயின்டன் டி காக் (19) சுமாரான துவக்கம் கொடுத்தார். கேப்டன் வான் டெர் துசென் (51), வியான் முல்டர் (36) ஓரளவு கைகொடுக்க, தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 163 ரன் எடுத்தது.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் பிரண்டன் கிங் (44), ஜான்சன் சார்லஸ் (69) நம்பிக்கை அளித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 13.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 165 ரன் எடுத்து வெற்றி பெற்றது. மேயர்ஸ் (36), அலிக் அதானஸ் (6) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை சார்லஸ் வென்றார். தொடர் நாயகன் விருதை வெஸ்ட் இண்டீசின் குடகேஷ் (8 விக்.,) கைப்பற்றினார்.
