ADDED : நவ 22, 2024 10:16 PM

புதுடில்லி: ஐ.பி.எல்., 18வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 14ல் துவங்க உள்ளது.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் 2008 முதல் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) 'டி-20' தொடர் நடத்தப்படுகிறது. இதுவரை 17 சீசன் முடிந்துள்ளன. அடுத்த ஆண்டு 18வது சீசன் நடக்கவுள்ளது. இதற்கான வீரர்கள் 'மெகா' ஏலம் நாளை சவுதி அரேபியாவில் துவங்குகிறது.
இரண்டு நாட்கள் ஏலம் நடக்கும். மொத்தம் 574 பேர் (366 இந்தியர், 208 வெளிநாட்டு வீரர்கள்) ஏலத்தில் வரவுள்ளனர். சமீபத்தில் ஒவ்வொரு அணியும், தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.
இந்நிலையில் அடுத்த மூன்று சீசன் எப்போது நடக்கும் என்ற தகவல் ஒவ்வொரு அணிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதன்படி அடுத்த ஆண்டு மார்ச் 14ல் துவங்கும் 18வது சீசன், மே 25ல் முடிவடைகிறது. அடுத்த இரு சீசன் முறையே மார்ச் 15 - மே 31 (2026), மார்ச் 14 - மே 30 (2027) நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த சீசனுக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை, வீரர்கள் ஏலம் முடிந்த பின் வெளியிடப்படும்.