ADDED : மே 16, 2024 10:26 PM

பெங்களூரு: ''ஓய்வுக்கு பின், என்னை கிரிக்கெட் பக்கம் சிறிது காலம் பார்க்க முடியாது,'' என கோலி தெரிவித்தார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலி, 35. தற்போதைய ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணிக்காக அசத்துகிறார். 13 போட்டிகளில் 661 ரன் (சராசரி 66.10, 'ஸ்டிரைக் ரேட்' 155.16) குவித்து, முதலிடத்தில் நீடிக்கிறார். அடுத்து அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடக்க உள்ள 'டி-20' உலக கோப்பை தொடரிலும்( ஜூன் 2-29) ரன் மழை பொழிய காத்திருக்கிறார். இத்தொடருடன் இவர் ஓய்வு பெற வாய்ப்பு உண்டு.
இது குறித்து கோலி கூறுகையில்,''வீரர்கள் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்க முடியாது. ஒருநாள் ஓய்வு பெற்றாக வேண்டும். என்னை பொறுத்தவரை விளையாடும் காலத்தில், இதை செய்ய தவறி விட்டோமே என்ற வருத்தத்துடன் விடைபெற விரும்பவில்லை. நான் நினைத்ததை செய்து முடித்துவிட வேண்டும். களத்தில் நுாறு சதவீதம் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுகிறேன். இந்த எண்ணம் தான் தொடர்ந்து விளையாட ஊக்கம் தருகிறது, ஓய்வை அறிவித்துவிட்டால், அதற்கு பின் சிறிது காலம் என்னை கிரிக்கெட் பக்கம் பார்க்க முடியாது,''என்றார்.