/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோலியுடன் களமிறங்குவாரா அஷ்வின்: மெல்போர்னில் நடக்குமா அதிசயம்
/
கோலியுடன் களமிறங்குவாரா அஷ்வின்: மெல்போர்னில் நடக்குமா அதிசயம்
கோலியுடன் களமிறங்குவாரா அஷ்வின்: மெல்போர்னில் நடக்குமா அதிசயம்
கோலியுடன் களமிறங்குவாரா அஷ்வின்: மெல்போர்னில் நடக்குமா அதிசயம்
ADDED : டிச 20, 2024 11:17 PM

சென்னை: 'மெல்போர்னில் உங்களுடன் சேர்ந்து பேட் செய்ய களமிறங்குவேன்,' என கோலிக்கு அஷ்வின் அளித்த பதில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், 38. கடந்த 2010ல் இந்திய அணியில் அறிமுகமானார். சமீப காலமாக இவருக்கு போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போதைய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் புறக்கணிக்கப்பட்டார். இந்த விரக்தியில் பிரிஸ்பேன் டெஸ்ட் முடிந்ததும், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 14 ஆண்டுகள் விளையாடிய இவர், 106 டெஸ்டில் 537 விக்கெட், 3,503 ரன் எடுத்துள்ளார்.
நல்ல நண்பர்கள்: அஷ்வினும் சக வீரர் கோலியும் சிறந்த நண்பர்கள். ஓய்வு முடிவை கூட கோலியிடம் தான் முதலில் பகிர்ந்து கொண்டார். இது குறித்து கோலி கூறுகையில்,''14 ஆண்டுகள் ஒன்றாக விளையாடி இருக்கிறோம். பழைய நினைவுகள் எல்லாம் கண் முன்னே வந்து சென்றன. அஷ்வினுடன் செலவிட்ட ஒவ்வொரு தருணமும் இனிமையானவை,''என்றார்.
இதற்கு பதில் அளித்த அஷ்வின்,'நன்றி நண்பா! ஏற்கனவே சொன்னது போல், மெல்போர்னில் உங்களுடன் சேர்ந்து பேட் செய்ய களமிறங்குவேன்,' என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் நான்காவது டெஸ்ட், வரும் டிச.26ல் மெல்போர்னில் துவங்கும் நிலையில், அஷ்வின் ஏன் இப்படி சொன்னார் என்பதற்கான உண்மையான காரணம் தெரியவில்லை. இருப்பினும் 2022ல் மெல்போர்னில் நடந்த பரபரப்பான 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியை தான் மறைமுகமாக கூறுவதாக 'நெட்டிசன்'கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா-பாக்., மோதல்: இப்போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 159/8 ரன் எடுத்தது. பின் களமிறங்கிய இந்திய அணிக்கு கடைசி 3 ஓவரில் 48 ரன் தேவைப்பட்டன. கோலி அதிரடியாக ஆட, கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்டன. நவாஸ் பந்துவீசினார். முதல் பந்தில் ஹர்திக் பாண்ட்யா அவுட்டானார். 'நோ-பாலில்' கோலி சிக்சர் அடிக்க, 7 ரன் கிடைத்தன. 5வது பந்தில் தினேஷ் கார்த்திக் அவுட்டானார்.
அஷ்வின் துணிச்சல்: கடைசி பந்தில் 2 ரன் தேவை என்ற நிலையில், அஷ்வின் களமிறங்கினார். மறுமுனையில் கோலி பதட்டத்துடன் காணப்பட்டார். நவாஸ் 'வைடாக' வீச, ஒரு ரன் உதிரியாக கிடைத்தது. மீண்டும் வீசப்பட்ட பந்தை அஷ்வின் துணிச்சலாக எதிர்கொண்டார். உள்வட்டத்தில் 7 பீல்டர்கள் நிறுத்தப்பட்டிருந்த போதும், 'மிட்-ஆப்' திசையில் பந்தை 'கூலாக' ஸ்கூப் செய்து ஒரு ரன் எடுத்து வெற்றி தேடித் தந்தார். இந்தியா 20 ஓவரில் 160/6 ரன் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் கோலி (82), அஷ்வின் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்த போட்டியை மனதில் வைத்து தான் கோலியுடன் களமிறங்க போவதாக அஷ்வின் 'ஜாலி'யாக தெரிவித்திருக்கலாம்.