/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
100 வது டெஸ்டில் அஷ்வின் * கிடைக்குமா கேப்டன் கவுரவம்
/
100 வது டெஸ்டில் அஷ்வின் * கிடைக்குமா கேப்டன் கவுரவம்
100 வது டெஸ்டில் அஷ்வின் * கிடைக்குமா கேப்டன் கவுரவம்
100 வது டெஸ்டில் அஷ்வின் * கிடைக்குமா கேப்டன் கவுரவம்
ADDED : பிப் 29, 2024 11:09 PM

புதுடில்லி: டெஸ்ட் அரங்கில் தனது 100 வது போட்டியில் களமிறங்க உள்ளார் அஷ்வின். இதில் கேப்டன் கவுரவம் கிடைக்குமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் 37. கடந்த 2011ல் வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆனார். 3 டெஸ்டில் 22 விக்கெட் சாய்த்த இவர், தொடர் நாயகன் ஆனார். சமீபத்தில் டெஸ்ட் அரங்கில் 500 வது விக்கெட் என்ற மைல்கல்லை எட்டிய அஷ்வின், இதுவரை 99 டெஸ்ட் (507 விக்.,), 116 ஒருநாள் (156), 65 'டி-20' (72) போட்டியில் பங்கேற்றுள்ளார்.
மார்ச் 7-11ல் தர்மசாலாவில் நடக்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான கடைசி போட்டி, அஷ்வினின் 100வது டெஸ்ட் ஆக அமைய உள்ளது. இதையடுத்து 100 வது டெஸ்டில் பங்கேற்கும் தமிழகத்தின் முதல் வீரர் என்ற பெருமை பெறவுள்ளார். முன்னதாக தமிழகத்தின் ஸ்ரீகாந்த், 43, தினேஷ் கார்த்திக், 26 டெஸ்டில் தான் பங்கேற்றனர். தவிர இந்திய அளவில் 14 வது, சர்வதேச அரங்கில் 77 வது வீரர் ஆக உள்ளார்.
சாதனை நாயகன்
அஷ்வின் இதுவரை, டெஸ்டில் 35 முறை ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றி உள்ளார். எட்டு முறை, ஒரு டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சேர்த்து 10 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்தினார். பேட்டிங்கிலும் கைகொடுக்கும் இவர், 5 சதம், 14 அரைசதம் உட்பட 3309 ரன் எடுத்துள்ளார்.
இருப்பினும் அன்னிய மண்ணில் நடக்கும் தொடர்களில் களமிறங்கும் 'லெவன்' அணியில் அஷ்வின் சேர்க்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2021-23) பைனலில் இவரை சேர்க்காததற்கு விமர்சனம் எழுந்தது.
கிடைக்குமா கவுரவம்
கோலி விலகிய போது, டெஸ்ட் அணி கேப்டனாக அஷ்வின் நியமிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டன. கடைசியில் மூன்று வித அணிக்கு கேப்டன் என்ற அடிப்படையில் ரோகித், வாய்ப்பை தட்டிச் சென்றார். தற்போது 100 வது டெஸ்டில் இவரை கேப்டனாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அஷ்வின் கூறுகையில்,'' பெருந்தன்மையுடன் பேசிய கவாஸ்கருக்கு நன்றி. என்னைப் பொறுத்தவரையில் கேப்டன் விஷயத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அனைத்தையும் கடந்து வந்துவிட்டேன் என நினைக்கிறேன். உண்மையில் இந்திய அணியுடன் உள்ள ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து வருகிறேன். இது நீண்ட காலம் நினைவில் நிலைத்து இருக்கும். இவற்றை நினைத்து மகிழ்ச்சியாக இருப்பேன்,'' என்றார்.
14வது வீரர்
இந்திய டெஸ்ட் அரங்கில் இதுவரை 313 வீரர்கள் அறிமுகம் ஆகினர். 13 பேர் மட்டும் 100 டெஸ்டில் பங்கேற்றனர். 14வது வீரராக அஷ்வின் இணைய காத்திருக்கிறார்.
அதிக டெஸ்டில் பங்கேற்ற 'டாப்-14' வீரர் விபரம்
வீரர் டெஸ்ட் ரன் விக்.,
சச்சின் 200 15,921 46
டிராவிட் 163 13,265 1
லட்சுமண் 134 8781 2
கும்ளே 132 2506 619
கபில்தேவ் 131 5248 434
கவாஸ்கர் 125 10,122 1
வெங்சர்க்கார் 116 6868 0
கங்குலி 113 7212 32
கோலி 113 8848 0
இஷாந்த் சர்மா 105 785 311
ஹர்பஜன் சிங் 103 2224 417
புஜாரா 103 7195 0
சேவக் 103 8503 40
அஷ்வின் 99 3309 507
அதிவேக 500
டெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 100, 200, 300, 400, 500வது விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலராக திகழ்கிறார் அஷ்வின் (507 விக்.,). அதிக விக்கெட் சாய்த்த இந்திய பவுலர்களில் கும்ளேவுக்கு (619) அடுத்து உள்ளார்.
தர்மசாலா டெஸ்டில் பும்ரா
இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்தாவது டெஸ்டில் (தர்மசாலா) களமிறங்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. நான்காவது டெஸ்டில் ஓய்வு எடுத்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சேர்க்கப்பட்டார். தற்போது சிகிச்சைக்காக லண்டன் சென்ற ராகுல், அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஆடுகளம் வேகத்துக்கு கைகொடுக்கும் என்ற நிலையில், முகேஷ் குமார் மீண்டும் இணைந்தார். சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இவர் மார்ச் 2-6ல் மும்பையில் நடக்கவுள்ள ரஞ்சி கோப்பை அரையிறுதியில் தமிழக அணிக்காக விளையாட உள்ளார்.
அணி விபரம்:
ரோகித் சர்மா (கேப்டன்), பும்ரா (துணைக் கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் படிதர், சர்பராஸ் கான், துருவ் ஜுரல், பரத், தேவ்தத் படிக்கல், அஷ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.

