/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பதிலடி கொடுக்குமா ஆஸ்திரேலியா: சிட்னி டெஸ்டில் எதிர்பார்ப்பு
/
பதிலடி கொடுக்குமா ஆஸ்திரேலியா: சிட்னி டெஸ்டில் எதிர்பார்ப்பு
பதிலடி கொடுக்குமா ஆஸ்திரேலியா: சிட்னி டெஸ்டில் எதிர்பார்ப்பு
பதிலடி கொடுக்குமா ஆஸ்திரேலியா: சிட்னி டெஸ்டில் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 03, 2026 10:39 PM

சிட்னி: மெல்போர்னில் கண்ட தோல்விக்கு சிட்னி டெஸ்டில் பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஆஸ்திரேலியா உள்ளது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 3-1 என ஏற்கனவே தொடரை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. ஐந்தாவது, கடைசி டெஸ்ட் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஜன. 4ல் துவங்குகிறது.
கவாஜா ஓய்வு: முதல் மூன்று டெஸ்டில் அசத்திய ஆஸ்திரேலியா, சமீபத்தில் மெல்போர்னில் நடந்த 4வது டெஸ்டில் 2 நாளில் தோற்றது. இதற்கு சிட்னியில் பதிலடி கொடுக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணி 4-1 என கோப்பை வெல்லலாம். இப்போட்டியுடன் ஓய்வு பெற உள்ள 'டாப்-ஆர்டர் பேட்டர்' உஸ்மான் கவாஜா, இத்தொடரில் விளையாடிய 3 டெஸ்டில், 153 ரன் மட்டும் எடுத்துள்ளார். கடைசி போட்டியில் ரன் மழை பொழிய காத்திருக்கிறார்.
பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட் (437 ரன்), அலெக்ஸ் கேரி (291) நம்பிக்கை தருகின்றனர். பெரிய அளவில் சோபிக்காத லபுசேன் (174), கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (136) எழுச்சி கண்டால் நல்லது. கிரீனுக்கு பதிலாக பியூ வெப்ஸ்டர் தேர்வாகலாம். 'வேகத்தில்' ஸ்டார்க் (26 விக்கெட்), ஸ்காட் போலந்து (16) கைகொடுக்கின்றனர். சுழற்பந்துவீச்சாளராக டாட் மர்பி இடம் பெறலாம்.
இரண்டாவது வெற்றி: ஆஸ்திரேலிய மண்ணில் 15 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இங்கிலாந்து அணி உள்ளது. சிட்னியிலும் அசத்தினால் தொடர்ந்து 2வது வெற்றியை பெறலாம்.
பேட்டிங்கில் ஜாக் கிராலே (256 ரன்), ஜோ ரூட் (234), ஹாரி புரூக் (232) கைகொடுக்கின்றனர். 'மிடில்-ஆர்டரில்' கேப்டன் ஸ்டோக்ஸ் எழுச்சி காண வேண்டும். வேகப்பந்துவீச்சாளர்களான ஆர்ச்சர், அட்கின்சன் காயத்தால் விலகியது பின்னடைவு. மாத்யூ பாட்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங் ஆகியோரை நம்பி வேகப்பந்துவீச்சு உள்ளது. 'சுழலில்' சோயிப் பஷிர் இடம் பெறலாம்.
இதுவரை
* டெஸ்ட் அரங்கில் இதுவரை மோதிய 365 போட்டியில், ஆஸ்திரேலியா 155, இங்கிலாந்து 113ல் வென்றது. 97 டெஸ்ட் 'டிரா' ஆனது.
* சிட்னி மைதானத்தில் பங்கேற்ற 57 டெஸ்டில், ஆஸ்திரேலியா 27, இங்கிலாந்து 22ல் வெற்றி பெற்றன. 8 டெஸ்ட் 'டிரா' ஆனது. கடைசியாக இங்கு 2022ல் இவ்விரு அணிகள் மோதிய போட்டி 'டிரா' ஆனது.
பாதுகாப்பு அதிகரிப்பு
சிட்னி கடற்கரையில் நடந்த (டிச. 15) பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து சிட்னி கிரிக்கெட் மைதானத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
'பிங்க்' டெஸ்ட்
ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மெக்ராத்தின் 'கேன்சர்' அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் வகையில், சிட்னியில் இன்று துவங்கும் போட்டி 'பிங்க்' டெஸ்ட் ஆக நடக்கும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் 'பிங்க்' (இளஞ்சிகப்பு) நிற தொப்பி அணிந்து விளையாடுவர். ஜெர்சியில், வீரர்களின் பெயர், எண் 'பிங்க்' நிறத்தில் இருக்கும்.

