/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
வெற்றிப் பாதைக்கு திரும்புமா சென்னை: டில்லி அணியுடன் மோதல்
/
வெற்றிப் பாதைக்கு திரும்புமா சென்னை: டில்லி அணியுடன் மோதல்
வெற்றிப் பாதைக்கு திரும்புமா சென்னை: டில்லி அணியுடன் மோதல்
வெற்றிப் பாதைக்கு திரும்புமா சென்னை: டில்லி அணியுடன் மோதல்
ADDED : ஏப் 04, 2025 11:53 PM

சென்னை: சென்னை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. ருதுராஜ் காயத்தால் அவதிப்படுவதால், கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனி ஏற்கலாம். இவரது தலைமையில் சென்னை அணி, வெற்றிப் பாதைக்கு திரும்பலாம்.
சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் பிரிமியர் லீக் போட்டியில் சென்னை, டில்லி அணிகள் மோத உள்ளன. முதல் போட்டியில் சென்னை அணி, மும்பையை சாய்த்தது. பின் பெங்களூரு, ராஜஸ்தானிடம் தோற்றது.
கேப்டன் மாற்றம்: கேப்டன் ருதுராஜ் களமிறங்குவது சந்தேகம். ராஜஸ்தானுக்கு எதிரான கடந்த போட்டியில், துஷார் தேஷ்பாண்டே வீசிய பந்து தாக்கியதில் இவரது வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதிலிருந்து தேறாத பட்சத்தில், இன்று கேப்டன் பொறுப்பை தோனி ஏற்பார். சென்னை அணிக்கு 226 போட்டிகளில் கேப்டனாக இருந்த தோனி, 5 பிரிமியர் கோப்பை, 2 சாம்பியன்ஸ் லீக் பட்டங்களை வென்று தந்தார். கடைசியாக 2023ல் சென்னை அணி கோப்பை வென்ற போது கேப்டனாக இருந்தார். 2024ல் தலைமை பதவியை ருதுராஜிடம் ஒப்படைத்தார். நீண்ட இடைவேளைக்கு பின் மீண்டும் தலைமை தாங்க உள்ளார் தோனி.
இது பற்றி பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி கூறுகையில்,''ருதுராஜ் களமிறங்குவது பற்றி இன்று முடிவு எடுக்கப்படும். இவர் விளையாடாத பட்சத்தில் இளம் விக்கெட்கீப்பர் (மறைமுகமாக தோனி) அணியை வழிநடத்தலாம்,'' என்றார்.
பேட்டிங் பாதிப்பு: நல்ல 'பார்மில்' உள்ள ருதுராஜ் பங்கேற்க தவறினால், 'டாப்-ஆர்டரில்' பாதிப்பு ஏற்படும். துவக்கத்தில் ராகுல் திரிபாதி சொதப்புகிறார். இன்று கான்வே சேர்க்கப்படலாம். ரச்சின் 3வது வீரராக வரலாம். 'மிடில் ஆர்டரில்' ஷிவம் துபே, விஜய் சங்கர், தீபக் ஹூடா, சாம் கர்ரன் ஏமாற்றுகின்றனர். ஜடேஜா தடுமாறுவது, 'பினிஷிங்' பணியை தோனி கச்சிதமாக செய்யாததால், 180 ரன்னுக்கு மேற்பட்ட இலக்கை 'சேஸ்' செய்ய முடிவதில்லை. இன்று ஒட்டுமொத்த பேட்டிங் படையும் எழுச்சி காண வேண்டும்.
நுார் நம்பிக்கை: சேப்பாக்கத்தில் மீண்டும் 'சுழல்' சூறாவளி வீசலாம். மணிக்கட்டு 'ஸ்பின்னர்' நுார் அகமது (3 போட்டி, 9 விக்., எகானமி 6.83) மிரட்ட காத்திருக்கிறார். தமிழகத்தின் அனுபவ அஷ்வின் 'சுழல்' (3 போட்டி, 10 ஓவர், 99 ரன், 3 விக்., எகானமி 9.90) எடுபடாதது ஏமாற்றம். 'வேகத்தில்' அசத்த பதிரனா, கலீல் அகமது உள்ளனர்.
டில்லி அணிக்கு ஆலோசகர் கெவின் பீட்டர்சன் வரவு புத்துயிர் அளித்துள்ளது. கடந்த இரு போட்டிகளிலும் (எதிர், லக்னோ, ஐதராபாத்) வென்றது. சென்னை அணிக்காக ஏற்கனவே விளையாடிய அனுபவம் டுபிளசிக்கு கைகொடுக்கலாம். மெக்குர்க், ஸ்டப்ஸ், அபிஷேக் போரல், அஷுதோஷ் சர்மா, விப்ராஜ் என பேட்டிங் வலுவாக உள்ளது.
குல்தீப் 'மேஜிக்'மணிக்கட்டு 'ஸ்பின்னர்' குல்தீப் யாதவ் 'மேஜிக்' நிகழ்த்தலாம். ரன்னை கட்டுப்படுத்துவது இவரது பலம். 2 போட்டியில் 5 விக்கெட் (எகானமி 5.25) வீழ்த்தியுள்ளார். ஐதராபாத்திற்கு எதிராக 5 விக்கெட் சாய்த்த ஸ்டார்க், முகேஷ் குமார், மோகித் சர்மா, உள்ளூர் நாயகன் நடராஜன் உள்ளிட்டோர் 'வேகத்தில்' சாதிக்கலாம்.
மழை வருமா
* போட்டி மதியம் துவங்குவதால், வெயில் வாட்டி வதைக்கும். மழைக்கு வாய்ப்பு இல்லை.
* சேப்பாக்கம் ஆடுகளம் வழக்கம் போல 'ஸ்பின்னர்'களுக்கு சாதகமாக இருக்கும்.
வருகிறார் சாம்சன்
பஞ்சாப், முல்லன்புரில் இன்று நடக்கும் மற்றொரு போட்டியில் ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன் மீண்டும் கேப்டனாக களமிறங்க உள்ளார். ஜெய்ஸ்வால், ரியான் பராக், ஹெட்மெயர், நிதிஷ் ராணா, ஆர்ச்சர், தீக் ஷனா, சந்தீப் சர்மா கைகொடுக்கலாம். பஞ்சாப் அணிக்கு கேப்டன் ஷ்ரேயஸ், பிரப்சிம்ரன், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், யான்சென், சஹால், அர்ஷ்தீப் சிங் சாதிக்கலாம்.
எது பலம்
டில்லி அணி வீரர் குல்தீப் கூறுகையில்,''சேப்பாக்கத்தில் மணிக்கட்டு 'ஸ்பின்னர்'களை சமாளிப்பது கடினம். நுார் அகமது 'சுழல்' நுணுக்கங்களை கற்பதில் ஆர்வம் கொண்டவர். அவரிடம் 'லெக்-ஸ்பின்' பற்றி விவாதித்தேன். பேட்டரின் மனநிலை அறிந்து பந்துவீச வேண்டும். பந்தை நன்கு சுழற்றுவதே எனது பலம்,''என்றார்.