sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

கவுகாத்தி மைதானத்தில் கலக்குமா இந்தியா: கேப்டனாக சாதிப்பாரா ரிஷாப் பன்ட்

/

கவுகாத்தி மைதானத்தில் கலக்குமா இந்தியா: கேப்டனாக சாதிப்பாரா ரிஷாப் பன்ட்

கவுகாத்தி மைதானத்தில் கலக்குமா இந்தியா: கேப்டனாக சாதிப்பாரா ரிஷாப் பன்ட்

கவுகாத்தி மைதானத்தில் கலக்குமா இந்தியா: கேப்டனாக சாதிப்பாரா ரிஷாப் பன்ட்


ADDED : நவ 21, 2025 11:03 PM

Google News

ADDED : நவ 21, 2025 11:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கவுகாத்தி: கவுகாத்தி பர்சாபரா மைதானத்தில் முதல் முறையாக நடக்க உள்ள டெஸ்டில், புது கேப்டனாக ரிஷாப் பன்ட் அவதாரம் எடுக்கிறார். இதில் கட்டாய வெற்றியை எதிர்நோக்கி இந்தியா களமிறங்குகிறது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் சவாலில் இந்தியா தோற்றது. இரண்டாவது டெஸ்ட் இன்று அசாமின் கவுகாத்தி பர்சாபரா மைதானத்தில் இன்று துவங்குகிறது. 'வடகிழக்கு மாநிலங்களின் நுழைவாயில்' என கவுகாத்தி போற்றப்படுகிறது. இங்கு ஒருநாள், 'டி-20' போட்டிகள் நடந்துள்ளன. டெஸ்ட் போட்டிக்கு புது மைதானம். நாட்டின் 30வது டெஸ்ட் மைதானமாக உருவெடுத்துள்ளது.

பி.சி.சி.ஐ., செயலர் தேவஜித் சைக்கியா கூறுகையில்,''கவுகாத்தி மைதானம் டெஸ்ட் அந்தஸ்து பெறுவது வரலாற்று சிறப்புமிக்க தருணம். டெஸ்ட் அங்கீகாரம் கிடைத்திருப்பதன் மூலம் இங்குள்ள ரசிகர்களின் நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது,''என்றார்.

வியூகம் சரியா: இந்திய அணியில் இருந்து 'ரெகுலர்' கேப்டன் சுப்மன் கில் (கழுத்து வலி காயம்) விடுவிக்கப்பட்ட நிலையில், டெஸ்ட் கேப்டன் பொறுப்பை முதல் முறையாக ரிஷாப் பன்ட் ஏற்கிறார். இந்திய அணியின் 38வது டெஸ்ட் கேப்டனாகிறார். கடந்த 12 மாதங்களில் ரோகித், பும்ரா, சுப்மனுக்கு பின் 4வது இந்திய டெஸ்ட் கேப்டனாகிறார். கடந்த கோல்கட்டா டெஸ்டில் சுப்மன் கில் காயம் அடைந்த சமயத்தில், தற்காலிக கேப்டனாக செயல்பட்டார் ரிஷாப்.

இரண்டாவது நாள் முடிவில் தென் ஆப்ரிக்கா 94/7 ரன் எடுத்து தவித்தது. மூன்றாவது நாள் ஆட்டம் துவங்கியதும் 'வேகப்புயல்' பும்ரா, சிராஜ் கையில் பந்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 'ஸ்பின்னர்'கள் ரவிந்திர ஜடேஜா, அக்சர் படேலை பந்துவீச அழைத்து அதிர்ச்சி கொடுத்தார். இதை பயன்படுத்திய தென் ஆப்ரிக்க அணி வெற்றியை வசப்படுத்தியது. இது கேப்டனாக ரிஷாப் வியூகம் பற்றி கேள்வி எழுப்பியது. இரண்டாவது டெஸ்டில் தவறை திருத்திக் கொள்ள வேண்டும். இப்போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற இக்கட்டான நிலையில், அணியை வழிநடத்த உள்ளார். சுப்மனுக்கு பதில் தமிழக வீரர் சாய் சுதர்சன் வாய்ப்பு பெறலாம்.

நிதிஷ் வாய்ப்பு: ராகுல், ஜெய்ஸ்வால் நல்ல துவக்கம் தர வேண்டும். துருவ் ஜுரல், வாஷிங்டன், ரவிந்திர ஜடேஜா கைகொடுக்கலாம். கடந்த டெஸ்டில் தென் ஆப்ரிக்க 'ஸ்பின்னர்' ஹார்மர் வீழ்த்திய 8 விக்கெட்டுகளில் 6 பேர் இடது கை பேட்டர். இதனால் இன்று அக்சர் படேல் அல்லது குல்தீப் நீக்கப்பட்டு, வலது கை பேட்டிங் 'ஆல்-ரவுண்டர்' நிதிஷ் குமார் இடம் பெறலாம். 'வேகத்தில்' பும்ரா, சிராஜ் மிரட்டலாம்.

பவுமா பலம்: தென் ஆப்ரிக்க அணியின் பலமே பவுமா தான். கேப்டனாக 11 டெஸ்டில் 10ல் வெற்றி தேடித் தந்துள்ளார். பேட்டிங்கிலும் கைகொடுக்கிறார். மார்க்ரம், ஜோர்ஜி ரன் சேர்க்கலாம். பேட்டிங்கை பலப்படுத்த டிவால்ட் பிரவிசை சேர்ப்பதா அல்லது 'ஸ்பின் ஆல்-ரவுண்டர்' சேனுரன் முத்துசாமிக்கு வாய்ப்பு கொடுப்பதா என்ற குழப்பத்தில் உள்ளது. ரபாடா (விலா எலும்பு காயம்) நீக்கப்பட்டது பலவீனம். இவருக்கு பதில் நிகிடி சேர்க்கப்பட்டுள்ளார். 'வேகத்தில்' யான்சென், 'சுழலில்' அசத்த ஹார்மர், கேஷவ் மஹாராஜ் உள்ளனர்.

சுதந்திரம்

''இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன். சக வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்க விரும்புகிறேன். ஒவ்வொருவரும் சொந்தமாக பாடம் படித்து, அணியின் நலனுக்காக சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். களத்தில் நுாறு சதவீத திறமை வெளிப்படுத்த முயற்சிப்பேன்.

-ரிஷாப் பன்ட்இந்திய அணி கேப்டன்

பொறாமை

நேற்று காலை கண் விழித்ததும் ஆஷஸ் டெஸ்ட் போட்டியை பார்த்தேன். இத்தொடரில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து 5 போட்டியில் மோதுவதை அறிந்து பொறாமைப்பட்டேன். எதிர்காலத்தில் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வேண்டும்.

-பவுமாதென் ஆப்ரிக்க கேப்டன்

மாற்றம் நிரந்தரம்

இந்திய அணியின் பயிற்சியாளராக காம்பிர் பதவியேற்ற 16 மாதங்களில் 18 டெஸ்டில் 7 வெற்றி, 9 தோல்வி, 2 'டிரா' சந்தித்துள்ளார். இதில் சொந்த மண்ணில் 4 வெற்றி, 4 தோல்வி, அன்னிய மண்ணில் 3 வெற்றி, 2 'டிரா', 5 தோல்வி அடங்கும். டெஸ்ட் பேட்டிங் வரிசையில் முக்கியமான 3வது இடத்தில் முன்பு டிராவிட், புஜாரா போன்றோர் நிரந்தரமாக களமிறங்குவர். ஆனால், காம்பிர் வந்த பிறகு 18 டெஸ்டில், 7 பேரை மூன்றாவது இடத்தில் 'மியூசிக்கல்-சேர்' பாணியில் மாற்றி மாற்றி பயன்படுத்தியுள்ளார். சுப்மன் கில், சாய் சுதர்சன், கருண் நாயர், கோலி, தேவ்தத் படிக்கல், ராகுலை களமிறக்கினார். கடந்த டெஸ்டில் 'ஸ்பெஷலிஸ்ட் பேட்டர்' அல்லாத வாஷிங்டன் சுந்தரை 3வது இடத்தில் அனுப்பி அதிர்ச்சி அளித்தார். இன்று சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு அளிப்பாரா அல்லது வேறு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறாரா என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.

9:00 மணி

கவுகாத்தியில் காலையில் சூரியன் விரைவாக உதிக்கும். மாலையில் விரைவாக மறையும். இதனால் அரை மணி நேரம் முன்னதாக, காலை 9 மணிக்கு போட்டி துவங்கும். தேநீர் 11:00-11:20, மதிய உணவு இடைவேளை 1:20-2:00 மணி என மாற்றப்பட்டுள்ளது. பின் 2:00-4:00 மணி வரை ஆட்டம் நடக்கும்.

ஆடுகளம் எப்படி

கோல்கட்டா 'சுழல்' ஆடுகளத்தைவிட கவுகாத்தி களம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. முதல் இரு நாள் 'பேட்டிங்' எடுபடலாம். மூன்றாவது நாளில் இருந்து 'ஸ்பின்னர்'கள் சாதிக்கலாம்.

மழை வருமா

கவுகாத்தியில் ஐந்து நாட்களும், வானம் தெளிவாக காணப்படும். மழை வர வாய்ப்பில்லை.






      Dinamalar
      Follow us