/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோப்பை வெல்லுமா இந்தியா * ராஞ்சியில் நான்காவது டெஸ்ட்
/
கோப்பை வெல்லுமா இந்தியா * ராஞ்சியில் நான்காவது டெஸ்ட்
கோப்பை வெல்லுமா இந்தியா * ராஞ்சியில் நான்காவது டெஸ்ட்
கோப்பை வெல்லுமா இந்தியா * ராஞ்சியில் நான்காவது டெஸ்ட்
ADDED : பிப் 22, 2024 10:31 PM

ராஞ்சி: இந்தியா, இங்கிலாந்து மோதும் நான்காவது டெஸ்ட் ராஞ்சியில் துவங்குகிறது. இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், தொடரை வென்று கோப்பை கைப்பற்றலாம்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்ட் முடிவில், இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் ராஞ்சியில் பிப். 23ல் துவங்குகிறது.
பேட்டிங் எப்படி
இந்திய அணியில் கோலி, ராகுல், ஸ்ரேயாஸ் என பல முன்னணி வீரர்கள் இல்லாத போதும், கேப்டன் ரோகித் சர்மா அசத்துகிறார். இவருக்கு, அடுத்த தலைமுறை இளம் வீரர்கள் கைகொடுக்கின்றனர். துவக்கத்தில் ஜெய்ஸ்வால்
(இரு இரட்டை சதம் உட்பட 545 ரன்) பலம் சேர்க்கிறார். சுப்மன் கில், 3வது இடத்தில் 'செட்டாகி' வருகிறார்.
'மிடில் ஆர்டரில்' இரு அரைசதம் அடித்த, புதிய வரவு சர்பராஸ் கான், விக்கெட் கீப்பர் துருவ் ஜோரல் நம்பிக்கை தருகின்றனர். ரஜத் படிதர் (5, 0) வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும்.
ஐந்து பவுலர்கள்
பந்துவீச்சில் அதிக விக்கெட் (17) சாய்த்த வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. இதனால் முகமது சிராஜுடன், முகேஷ் குமார் அல்லது அறிமுக வீரராக ஆகாஷ் தீப் களமிறங்கலாம். சுழலில் 'சீனியர்' அஷ்வின்-ஜடேஜா-குல்தீப் கூட்டணியில் மாற்றம் இருக்காது.
ராபின்சன் வருகை
இங்கிலாந்து அணி, ஐதராபாத் டெஸ்ட் முதல் இன்னிங்சில் 190 ரன் பின்தங்கியது. இருப்பினும் தங்களது அதிரடி 'பாஸ் பால்' ஆட்டம் காரணமாக இந்தியாவை வீழ்த்தியது. இந்த விளாசல் ஆட்டம் அடுத்த இரு போட்டியில் கைகொடுக்கவில்லை. இம்முறை கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்குகிறது. கிராலே, டக்கெட் ஜோடி மீண்டும் நல்ல துவக்கம் தர முயற்சிக்கலாம்.
தொடர்ந்து ஏமாற்றும் பேர்ஸ்டோவ் (3 டெஸ்ட், 92 ரன்), அனுபவ ஜோ ரூட் இதுவரை ஒரு அரைசதமும் அடிக்கவில்லை. ஜோ ரூட் எடுத்த ரன்களை(77) விட அதிகமாக, 107 ஓவர் (7 விக்.,) பந்துவீசியது வேடிக்கையான விஷயம். போப், கேப்டன் ஸ்டோக்ஸ் ஜோடி, அதிக ரன் சேர்த்து நெருக்கடி தரலாம்.
பவுலிங்கில் ஆண்டர்சனுடன், 'வேகத்தில்' ராபின்சன் சேர்க்கப்பட்டுள்ளார். மார்க் உட், ரேஹன் அகமது நீக்கப்பட்டனர். 'சுழலில்' ஹார்ட்லேயுடன், மீண்டும் சோயப் பஷிர் இணைந்துள்ளார். முழங்கால் காயத்தில் இருந்து மீண்ட ஸ்டோக்ஸ் பந்துவீச வாய்ப்பு உண்டு.
17
இந்திய அணி கடைசியாக 2012ல் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது. இதன் பின் பங்கேற்ற 16 தொடரில் 16 தொடரையும் இந்தியா வென்றது.
* தவிர, இதில் நடந்த 55 டெஸ்டில் இந்தியா 37ல் வென்றது. 5ல் தான் தோற்றது (13 டிரா). இந்த ஆதிக்கம் தொடர்ந்தால் இந்தியா 17 வது கோப்பை கைப்பற்றலாம்.
ஆடுகளம் எப்படி
ராஞ்சி ஆடுகளம் முதல் இரு நாள் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். அடுத்த மூன்று நாள் சுழற்பந்துவீச்சிற்கு கைகொடுக்கலாம்.
மழை வருமா
ராஞ்சியில் இன்று முதல் நான்கு நாள், வானம் மேகமூட்டமாக காணப்படும். ஐந்தாவது, கடைசி நாள் காலையில் இடியுடன் கூடிய மழை வர 54 சதவீதம் வாய்ப்புள்ளது.