வெலிங்டனில் வெல்லுமா இந்தியா: முதல் டெஸ்ட் இன்று துவக்கம்
வெலிங்டனில் வெல்லுமா இந்தியா: முதல் டெஸ்ட் இன்று துவக்கம்
UPDATED : நவ 19, 2026 12:00 AM
ADDED : நவ 18, 2026 07:37 PM

வெலிங்டன்: இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று வெலிங்டனில் துவங்குகிறது. வேகத்துக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய வீரர்கள் சாதித்து, தொடரை வெற்றியுடன் துவக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, இரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் இன்று வெலிங்டனில் பேசின் ரிசர்வ் மைதானத்தில் துவங்குகிறது. இந்திய அணி கடைசியாக 2009ல் தோனி தலைமையில் டெஸ்ட் தொடரை 1–0 என வென்றது. இதன் பின் நடந்த இரு தொடரிலும் (2014, 2020) தோற்றது.
இம்முறை, ‘டி–20’ (3–2), ஒருநாள் (3–1) தொடர்களை வென்ற உற்சாகத்தில், டெஸ்ட் தொடரில் களமிறங்குகிறது. இதில் 7 பேட்டர்கள், 4 பவுலர்கள் என்ற கூட்டணியுடன் இந்தியா களமிறங்க திட்டமிட்டுள்ளது.
சோதனைக் களம்
துவக்கத்தில் இளம் வீரர் ஜெய்ஸ்வால், அனுபவ ராகுல் ஜோடி இணைந்துள்ளது. ‘மிடில் ஆர்டரில்’ தேவ்தத் படிக்கல் இடம் பெற காத்திருக்கிறார். இதனால், தமிழகத்தின் சாய் சுதர்சன் இடம் பெறுவது சந்தேகம்.
அடுத்து வரும் கேப்டன் சுப்மன் கில்லுக்கு இது சோதனைக் களம் தான். எனினும், இங்கிலாந்து மண்ணில் 2025ல் அசத்தியது போல, சாதிக்க முயற்சிக்கலாம்.
நீண்ட இடைவெளிக்குப் பின் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் களமிறங்குகிறார். தவிர, துருவ் ஜுரலும் உள்ளார். சுழற்பந்து வீச்சு ‘ஆல் ரவுண்டராக’ ஜடேஜா இடம் பெறும் பட்சத்தில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்காது.
பும்ரா வருகை
வேகப்பந்து வீச்சை பொறுத்தவரையில் பும்ரா நம்பிக்கை தர காத்திருக்கிறார். எனினும், டெஸ்ட் அரங்கில் மற்ற அணிகளுக்கு எதிராக 18.76 பவுலிங் சராசரி கொண்டுள்ள பும்ரா, நியூசிலாந்துக்கு எதிராக மட்டும் ஏமாற்றியுள்ளார் (45.44).
இவருடன் அனுபவ சிராஜை முந்தி, பந்துகளை நன்றாக பவுன்ஸ் செய்யும், உயரமான பிரசித் கிருஷ்ணா ஜோடி சேரலாம். ஒருநாள் தொடரில் அசத்திய குர்னுார் பிராரும் போட்டியில் உள்ளார். பேட்டிங் பலத்தை அதிகரிக்க திட்டமிட்டால், நிதிஷ் குமார், அன்சுல் கம்போஜ், ஆகாஷ் தீப் என, இவர்களில் ஒருவர், இடத்தை பெறுவர்.
சொந்தமண் பலம்
நியூசிலாந்து அணி கடைசியாக சொந்தமண்ணில் 2–1 என இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது. சூழ்நிலைக்கு ஏற்ப நிதானம், வேகமான ரன் குவிப்பை தரும் பேட்டர்கள், எதிரணிக்கு தொடர்ந்து நெருக்கடி தரும் மிரட்டலான வேகப்பந்து வீச்சாளர்கள் என, அனுபவம், மன உறுதியுடன் போராடும் திறன் கொண்ட அணியாக திகழ்கிறது.
கேப்டன் டாம் லதாம், கான்வே ஜோடி துவக்கம் தருவர். நிக்கோல்ஸ், காயத்தில் இருந்து மீண்ட ரச்சின் ரவிந்திரா, விக்கெட் கீப்பர் பிளண்டெல், ‘ஆல் ரவுண்டர்கள்’ மிட்செல், பிலிப்ஸ், நாதன் ஸ்மித் என 8வது வரிசை வரை பேட்டிங் நீள்கிறது. பவுலிங்கில் 6 அடி, 8 அங்குலம் உயரம் கொண்ட ஜேமிசன், 6 அடி, 5 அங்குலம் கொண்ட ஜேக்கப் டபி, சமீபத்தில் முதல் ஓவரில் 3 விக்கெட் சாய்த்த மாட் ஹென்றி என பலரும் வேகத்தில் மிரட்ட உள்ளனர்.
