/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'உலகை' வெல்லுமா இந்தியா: பைனலில் தென் ஆப்ரிக்காவுடன் மோதல்
/
'உலகை' வெல்லுமா இந்தியா: பைனலில் தென் ஆப்ரிக்காவுடன் மோதல்
'உலகை' வெல்லுமா இந்தியா: பைனலில் தென் ஆப்ரிக்காவுடன் மோதல்
'உலகை' வெல்லுமா இந்தியா: பைனலில் தென் ஆப்ரிக்காவுடன் மோதல்
ADDED : நவ 01, 2025 10:41 PM

நவி மும்பை: பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் இன்று இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது. 1983ல் ஆண்கள் அணி முதல் கோப்பை வென்றது போல, ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, முதல் கோப்பை வெல்ல காத்திருக்கிறது.
இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் நடக்கிறது. நவி மும்பையில் இன்று நடக்கும் பைனலில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, லாரா வால்வார்ட் கேப்டனாக உள்ள வலிமையான தென் ஆப்ரிக்க அணியை சந்திக்கிறது.
இதுவரை ஐ.சி.சி., தொடரில் இந்திய பெண்கள் அணி ஒருமுறை கூட கோப்பை வெல்லவில்லை. இன்று சாதிக்கும் பட்சத்தில், பெண்கள் கிரிக்கெட் வளர்ச்சி இந்தியாவில் வேகம் எடுக்கும்.
லீக் சுற்றில் 7 போட்டியில் 3ல் மட்டும் வென்ற (3 தோல்வி, 1 முடிவில்லை) இந்தியா, அரையிறுதிக்கு முன்னேற பெரும்பாடு பட்டது. இதில் இமாலய ரன் 'சேஸ்' செய்து, 7 முறை சாம்பியன் ஆன ஆஸ்திரேலியாவை யாரும் எதிர்பார்க்காத வகையில் வெளியேற்றியது.
ஜெமிமா நம்பிக்கை: கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (89), விடா முயற்சியுடன் போராடிய ஜெமிமா (127) அணி வெற்றிக்கு உதவினர். இன்று பைனலில் ஸ்மிருதி மந்தனா (8 போட்டி, 389 ரன்), மீண்டும் அணிக்கு திரும்பிய ஷைபாலி, நல்ல துவக்கம் தர வேண்டும். தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக உலக கோப்பையில் 53 (2022), டெஸ்டில் 205 ரன் (2024) எடுத்த அனுபவம் ஷைபாலிக்கு கைகொடுக்கும் என நம்பலாம். ரிச்சா (201), ஆல் ரவுண்டர் தீப்தி (157 ரன், 17 விக்.,), பலமாக திகழ்கிறார்.
பவுலிங்கை பொறுத்தவரையில் ஸ்ரீ சரனி (13), கிராந்தி (9) விக்கெட் வேட்டைக்கு உதவுகின்றனர். சுழலில் ராதா நம்பிக்கை தரலாம். பீல்டிங்கில் எளிதான கேட்ச் வாய்ப்புகளை நழுவவிடுவது ஏமாற்றம் தருகிறது.
வெற்றிக்கு 'ரெடி': தென் ஆப்ரிக்க அணி லீக் சுற்றில் 7ல் 5 ல் வென்றது. இரு முறை 100க்கும் குறைவான ரன்னில் (69, 97) ஆல் அவுட்டானது. எனினும் இத்தொடரில் அதிக ரன் எடுத்த 'நம்பர்-1' லாரா (470 ரன்) தலைமையில் சிறப்பாக மீண்டு வந்துள்ளது. அரையிறுதியில் இங்கிலாந்தை சாய்த்து, முதன் முறையாக பைனலுக்குள் நுழைந்தது.
அனுபவ மரிஜான்னே காப் (204 ரன், 12 விக்.,), நாடின் டி கிளர்க் (190, 8), டிரையான் (167, 5) என பலர் 'ஆல் ரவுண்டர்களாக' இருப்பது கூடுதல் பலம். தஸ்மின் பிரிட்ஸ் (212) தன் பங்கிற்கு ரன் சேர்க்கிறார். பவுலிங்கில் மிலபா (12 விக்.,) 'சுழல்' ஜாலம் நிகழ்த்தலாம்.
ஆடுகளம் எப்படி
நவி மும்பை ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும்.
புதிய சாம்பியன்
பெண்கள் உலக கோப்பை தொடரில் இதுவரை நடந்த 12 சீசனில் ஆஸ்திரேலியா (9 முறை), இங்கிலாந்து (8) என இரு அணிகள் அல்லது ஏதாவது ஒரு அணி பைனலில் பங்கேற்று வந்தன. முதன் முறையாக இவ்விரு அணிகள் இல்லாத பைனல் இன்று நடக்கிறது. இதில் சாதிக்கும் அணி புதிய சாம்பியன் ஆகலாம்.
1973 முதல்...
உலக கிரிக்கெட்டில் முதலில் பெண்களுக்கான உலக கோப்பை தொடர் 1973ல் இங்கிலாந்தில் நடந்தது. பிறகு தான் ஆண்களுக்கான தொடர் துவங்கியது. இதில் நான்கு முறை (1983, 2003, 2011, 2023) பைனலுக்கு முன்னேறிய இந்திய ஆண்கள் அணி இரு முறை (1983, 2011) சாம்பியன் ஆனது.
மூன்றாவது முறை பைனலுக்கு முன்னேறிய இந்திய பெண்கள் அணி, இன்று முதல் கோப்பை வெல்ல வேண்டும்.
'டி-20' போல...
கடந்த 2024 'டி-20' உலக கோப்பை பைனலில் ரோகித்தின் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை சாய்த்து சாம்பியன் ஆனது. இதுபோல இன்று ஹர்மன்பிரீத் கவுர் சாதித்தால், இந்தியாவுக்கு உலக கோப்பை வென்று தந்த முதல் வீராங்கனை ஆகலாம்.
கிடைக்குமா ரூ. 125 கோடி
கடந்த 2024ல் ரோகித் தலைமையிலான ஆண்கள் அணி, 'டி-20' உலக கோப்பை வென்ற போது, பி.சி.சி.ஐ., சார்பில் ரூ. 125 கோடி பரிசு வழங்கப்பட்டது. இதே தொகை இந்திய பெண்கள் அணி கோப்பை கைப்பற்றினால் வழங்கப்படலாம்.
ஐந்து முறை
கடந்த 2023-25ல் டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2024ல் 'டி-20' உலக கோப்பையில் ஆண்கள், 2023, 2024 ல் 'டி-20', 2025ல் 19 வயது, சீனியர் உலக கோப்பையில் (50 ஓவர்) பெண்கள் என, தொடர்ந்து ஐந்து ஐ.சி.சி., தொடர்களில் தென் ஆப்ரிக்க அணி பைனலுக்கு முன்னேறியுள்ளது.
'ரிசர்வ் டே'
நவி மும்பையில் இன்று வானம் பெரும்பாலும் மேகமூட்டமாக இருக்கும். இரவு 8:00 மணி வரை, மழை வர, 24 சதவீதம் வாய்ப்புள்ளது.
ஒருவேளை மழையால் பாதிக்கப்பட்டால்...
* ஓவர்கள் குறைக்கப்பட்டு, இன்று எப்படியும் போட்டியை நடத்தி முடிக்க முயற்சிப்பர்.
* ஓவர்கள் குறைக்கப்பட்ட பின்பும், போட்டி நடத்த முடியவில்லை எனில், நாளை 'ரிசர்வ் டே'யில் பைனல், புதிதாக நடத்தப்படும்.
* 'ரிசர்வ் டேயிலும்' மழை வந்தால் (24 சதவீதம் வாய்ப்பு), குறைந்தது தலா 20 ஓவர்கள் கொண்ட போட்டி நடத்தப்படும்.
* மாறாக, மழை தொடர்ந்தால், இரு அணியும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

