/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
வருவாரா 'வேகப்புயல்' அர்ஷ்தீப் சிங்
/
வருவாரா 'வேகப்புயல்' அர்ஷ்தீப் சிங்
ADDED : நவ 01, 2025 10:36 PM

ஹோபர்ட்: மூன்றாவது 'டி-20' போட்டிக்கான இந்திய அணியில் 'வேகப்புயல்' அர்ஷ்தீப் சிங் இடம் பெறலாம். ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்தியா தோற்றது. முக்கியமான மூன்றாவது போட்டி இன்று ஹோபர்ட், பெல்லிரைவ் ஓவல் மைதானத்தில் நடக்க உள்ளது.
இந்திய அணியின் பேட்டர்கள் இன்று எழுச்சி காண வேண்டும். கடந்த போட்டியில் அபிஷேக் சர்மா மட்டும் 68 ரன் விளாசினார். மற்ற வீரர்கள் ஏமாற்றினர். கேப்டன் சூர்யகுமார், துணை கேப்டன் சுப்மன் கில் 'பவுன்சர்களில்' தடுமாறுகின்றனர். திலக் வர்மா சோபிக்கவில்லை.
ராணா ஏமாற்றம்: அனுபவ ஷிவம் துபேவுக்கு முன்னதாக 'ஆல்-ரவுண்டர்' ஹர்ஷித் ராணா 7வது இடத்தில் களமிறக்கப்பட்டார். 33 பந்தில் 35 ரன் எடுத்தார். 3 பவுண்டரி, 1 சிக்சர் மூலம் 4 பந்தில் 18 ரன் எடுத்தார். மீதமுள்ள 29 பந்தில் 17 ரன் தான் எடுத்தார். இவர், பந்துகளை வீணாக்கியதால், மறுமுனையில் இருந்த அபிஷேக், ரன் எடுக்க முடியாமல் தவித்தார். பின் 2 ஓவரில் 27 ரன்னை வாரி வழங்கிய ராணா, விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. இவருக்கு பதில் அர்ஷ்தீப் சிங் இடம் பெற்றிருந்தால், திருப்பம் ஏற்பட்டிருக்கும்.
காம்பிர் விருப்பம்: முன்பு ரோகித் சர்மா, பயிற்சியாளர் டிராவிட் இருந்த போது, அணியில் அர்ஷ்தீப் சிங் நிரந்தர இடம் பிடித்தார். 2024ல் நடந்த 'டி-20' உலக கோப்பையில் 17 விக்கெட் (8 போட்டி) வீழ்த்தி, இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல கைகொடுத்தார். தற்போதைய பயிற்சியாளர் காம்பிர், 'ஆல்-ரவுண்டர்'களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். இவருக்கு பிடித்த ஹர்ஷித் ராணா தொடர்ந்து வாய்ப்பு பெறுகிறார். 'டி-20' அரங்கில் 100 விக்கெட் வீழ்த்திய ஒரே இந்திய பவுலரான அர்ஷ்தீப் சிங் புறக்கணிக்கப்படுகிறார். இன்று அக்சர் படேல் நீக்கப்பட்டு அர்ஷ்தீப் சிங் இடம் பெறலாம். பும்ரா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் கைகொடுத்தால், இந்தியா முதல் வெற்றி பெறலாம்.
ஹேசல்வுட் 'ரெஸ்ட்': ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் மிட்சல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், ஸ்டாய்னிஸ் பலம். மேக்ஸ்வெல் அணிக்கு திரும்புவது நம்பிக்கை அளிக்கும். ஹேசல்வுட்டிற்கு 'ரெஸ்ட்' கொடுக்கப்பட்டது இந்தியாவுக்கு நிம்மதி தரும். பந்துவீச்சில் எல்லிஸ், அபாட், பார்ட்லட் தொல்லை தரலாம்.
மழை வருமா
ஹோபர்ட்டில் வெப்பமான வானிலை காணப்படும். மழைக்கு வாய்ப்பு குறைவு.
* ஆடுகளத்தை கணிப்பது கடினம். பவுண்டரி அளவு சிறியது என்பதால், ரன் குவிக்கலாம்.
* ஹோபர்ட்டில் இரு அணிகளும் 'டி-20' போட்டியில் முதல் முறையாக மோத உள்ளன.
'ப்ளீஸ்' வாய்ப்பு கொடுங்கள்: அஷ்வின்
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் கூறுகையில் ''இந்திய லெவன் அணியில் அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்படாதது புரியாத புதிராக உள்ளது. பும்ரா விளையாடினால், அர்ஷ்தீப் 2வது வேகப்பந்துவீச்சாளராக இடம் பெற வேண்டும். பும்ரா விளையாடாத பட்சத்தில் அர்ஷ்தீப் முதல் 'வேகமாக' இடம் பிடிக்க வேண்டும். அணியில் இடம் பெற தகுதியான வீரர். 'ப்ளீஸ்' அவருக்கு வாய்ப்பு கொடுங்கள்'' என்றார்.

