/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஆஸ்திரேலிய மண்ணில் சாதிக்குமா இந்தியா: பாண்டிங் கணிப்பு எப்படி
/
ஆஸ்திரேலிய மண்ணில் சாதிக்குமா இந்தியா: பாண்டிங் கணிப்பு எப்படி
ஆஸ்திரேலிய மண்ணில் சாதிக்குமா இந்தியா: பாண்டிங் கணிப்பு எப்படி
ஆஸ்திரேலிய மண்ணில் சாதிக்குமா இந்தியா: பாண்டிங் கணிப்பு எப்படி
ADDED : நவ 06, 2024 09:38 PM

துபாய்: ''ஆஸ்திரேலிய மண்ணில், இந்திய அணி ஏதாவது ஒரு டெஸ்டில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது,'' என, ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார்.
ஆஸ்திரேலியா செல்லவுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர்-கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், நவ. 22ல் பெர்த்தில் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் அடிலெய்டு (டிச. 6-10), பிரிஸ்பேன் (டிச. 14-18), மெல்போர்ன் (டிச. 26-30), சிட்னியில் (2025, ஜன. 3-7) நடக்கவுள்ளன.
கடைசியாக நடந்த 4 'பார்டர்-கவாஸ்கர் டிராபி' தொடரிலும் (2016-17, 2018-19, 2020-21, 2022-23) இந்திய அணி கோப்பை வென்றது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என இழந்த இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ள கடுமையாக போராட வேண்டும்.
இத்தொடர் குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியது:
அனுபவ வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி இல்லாமல் இந்திய அணியின் பவுலிங்கில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. ஒரு டெஸ்டில், ஆஸ்திரேலியாவின் 20 விக்கெட்டுகளை கைப்பற்ற இந்திய பவுலர்கள் கடுமையாக போராட வேண்டும். எனவே பேட்டர்களை நம்பி இந்திய அணி களமிறங்க வேண்டும்.
ஏதாவது ஒரு போட்டியில் இந்திய அணி வெற்றி பெறலாம். தொடரை ஆஸ்திரேலியா 3-1 எனக் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. இந்தியாவின் ரிஷாப் பன்ட் அல்லது ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், அதிக ரன் குவிப்பர். பேட்டிங் வரிசையில் 4வது இடத்தில் களமிறங்கும் ஸ்டீவ் ஸ்மித் நம்பிக்கை அளிப்பார். நியூசிலாந்து தொடரில் ரன் மழை பொழிந்த ரிஷாப் பன்ட், இந்தியாவின் 'மிடில்-ஆர்டரை' பலப்படுத்துவார். பவுலிங்கில் ஸ்டார்க், கம்மின்சை விட ஹேசல்வுட் அதிக விக்கெட் கைப்பற்றுவார்.
இவ்வாறு பாண்டிங் கூறினார்.