ADDED : பிப் 27, 2024 11:15 PM

புதுடில்லி: 'டெஸ்டில் சாதிக்க வேண்டும் என்ற தாகம் இருப்பவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும்' என்ற கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கருத்துக்கு அமோக ஆதரவு காணப்படுகிறது.
ஐ.பி.எல்., வரவுக்கு பின், முதல் தர போட்டியான ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டுக்கு முன்னணி வீரர்கள் முக்கியத்துவம் தருவதில்லை. ஐ.பி.எல்., 'டி-20' போட்டி, விரைவில் முடிந்துவிடும். ரஞ்சி போட்டியில் 4-5 நாள் விளையாட வேண்டும். இதன் காரணமாக ஸ்ரேயாஸ், இஷான் கிஷான் போன்றோர் ரஞ்சியை புறக்கணித்துவிட்டு, வரும் ஐ.பி.எல்., தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டனர். இது, பி.சி.சி.ஐ.,க்கு கோபத்தை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில் ரோகித் சர்மா தலைமையிலான இளம் இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது. கோலி, ராகுல், ஷமி போன்ற சீனியர்கள் இல்லாமல் சாதித்தது. இஷான் கிஷான் இல்லாத குறையை புதிய விக்கெட்கீப்பர்/பேட்டர் துருவ் ஜுரல் போக்கினார். ராஞ்சி டெஸ்டில் அசத்திய இவர்(90, 39 ரன்) வெற்றி நாயகனாக ஜொலித்தார். இத்தொடரில் இரண்டு இரட்டை சதம் விளாசிய ஜெய்ஸ்வால்(655 ரன்), ராஜ்கோட் போட்டியில் மிரட்டிய சர்பராஸ் கான்(62, 68 ரன்), ராஞ்சியில் 3 விக்கெட் சாய்த்த 'வேகப்புயல்' ஆகாஷ் தீப் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களாக ஜொலித்தனர்.
ராஞ்சி போட்டிக்கு பின் ரோகித் அளித்த பேட்டியில்,''டெஸ்ட் தொடர் கடினமானது. இதில் சாதிக்க வேண்டும் என்ற தாகம் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்திய அணியில் இனி வாய்ப்பு அளிக்கப்படும். ஆர்வம் இல்லாமல் விளையாடுவதில் பயன் இல்லை,''என்றார். இதன் மூலம் ஸ்ரேயாஸ், இஷானுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காது என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.
கிரிக்கெட்டின் முதுகெலும்பு
ரோகித் கருத்துக்கு மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. ம.பி., கிரிக்கெட் சங்க தலைவர் அபிலாஷ் கண்டேகர் கூறுகையில்,''கேப்டன் ரோகித் கருத்தை ஏற்கிறேன். இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பாக ரஞ்சி கோப்பை தொடர் உள்ளது. இதில் பங்கேற்கும் தாகம் இளம் வீரர்களிடம் இருக்க வேண்டும்,''என்றார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வெங்சர்க்கார் கூறுகையில்,''ரஞ்சியில் விளையாடுவது அவசியம். இந்திய ஆடுகளங்களில் சுழற்பந்துவீச்சை சமாளிக்கும் வித்தையை கற்றுக் கொள்ளலாம். சிலருக்கு ரஞ்சியில் பங்கேற்க விருப்பம் இல்லை என்றால், வேறு வீரர்களை தேர்வு செய்யலாம். இந்தியாவில் திறமைக்கு பஞ்சம் இல்லை,''என்றார்.
பணம், புகழ் தந்தது...
இந்திய வீரர்களில் பெரும்பாலானோர் நாட்டுக்காக டெஸ்டில் விளையாடுகின்றனர். சிலர் பணத்திற்காக ஐ.பி.எல்., தொடருக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறுகையில்,''இந்திய அணிக்கு விளையாடியதால் தான் வீரர்களுக்கு பணம், புகழ், அங்கீகாரம் கிடைத்தது. வாழ்க்கையில் எல்லாம் கொடுத்த இந்திய கிரிக்கெட்டுக்கு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். இதை செய்ய தவறினால், ரோகித் சொல்வது போல வாய்ப்பு மறுக்கலாம். டெஸ்ட் ஆர்வம் உள்ளவர்களை மட்டும் இந்திய அணியில் சேர்க்கலாம்,''என்றார்.
ஊக்கத் தொகை
இந்திய வீரர்களுக்கு தற்போது ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ. 15 லட்சம், ஒருநாள் போட்டிக்கு ரூ. 6 லட்சம், 'டி-20' போட்டிக்கு ரூ. 3 லட்சம் சம்பளம் தரப்படுகிறது. டெஸ்ட் போட்டிக்கான மோகத்தை அதிகரிக்கும் பொருட்டு சம்பளம் உயர்த்தப்பட உள்ளது. இது குறித்து பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,''ஒரு ஆண்டில் நடக்கும் அனைத்து டெஸ்ட் தொடர்களிலும் பங்கேற்கும் வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவது பற்றி ஆலோசித்து வருகிறோம்,''என்றார்.
