மீண்டும் விளாசுவாரா வைபவ் சூர்யவன்ஷி: குஜராத்-ராஜஸ்தான் அணிகள் மோதல்
மீண்டும் விளாசுவாரா வைபவ் சூர்யவன்ஷி: குஜராத்-ராஜஸ்தான் அணிகள் மோதல்
ADDED : மே 28, 2026 11:06 PM

புதிய சண்டிகர்: கிரிக்கெட் லீக் தகுதிச்சுற்று-2ல் (மே 29) குஜராத், ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி பைனலுக்குள் நுழையலாம்.
வருடம் தோறும் கிரிக்கெட் லீக் தொடர் நடக்கிறது. இதன் பைனலுக்கு பெங்களூரு அணி முன்னேறியது. மே 29ல் புதிய சண்டிகரில் உள்ள மஹாராஜ் யாதவிந்திர சிங் மைதானத்தில் அரையிறுதி போன்ற தகுதிச்சுற்று-2 நடக்கிறது. இதில், தகுதிச்சுற்று-1ல் தோற்ற குஜராத் அணி, 'எலிமினேட்டர்' போட்டியில் வென்ற ராஜஸ்தானை சந்திக்கிறது.
வைபவ் நம்பிக்கை: ராஜஸ்தான் அணிக்கு இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 15, பலம் சேர்க்கிறார். ஐதராபாத் அணிக்கு எதிரான 'எலிமினேட்டர்' போட்டியில் சிக்சர் மழை (12) பொழிந்த இவர், 29 பந்தில், 97 ரன் விளாசினார். இம்முறை விளையாடிய 15 போட்டியில், ஒரு சதம், 4 அரைசதம் உட்பட 680 ரன் ('ஸ்டிரைக் ரேட்' 242.85) குவித்த இவர், குஜராத் பவுலர்களுக்கு தொல்லை தர காத்திருக்கிறார்.
முகமது சிராஜ், ரபாடா உள்ளிட்ட 'வேகங்களுக்கு' எதிராக சிக்சர் மழை பொழிந்து புதிய சாதனை படைக்கலாம். இவருக்கு, யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒத்துழைப்பு தந்தால் நல்ல துவக்கம் கிடைக்கும்.
'எலிமினேட்டர்' போட்டியில் அரைசதம் விளாசிய துருஜ் ஜுரெல் மீண்டும் விளாசலாம். கேப்டன் ரியான் பராக், டோனோவன் பெரெய்ரா, ரவிந்திர ஜடேஜா உள்ளிட்டோர் கைகொடுத்தால் இமாலய ஸ்கோரை பெறலாம்.
வேகப்பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் (24 விக்கெட், 15 போட்டி) நம்பிக்கை தருகிறார். இவருக்கு, பிரிஜேஷ் சர்மா (13 விக்.,), பர்கர் (13) உள்ளிட்ட 'வேகங்கள்' கைகொடுக்க வேண்டும். 'சுழலில்' ரவிந்திர ஜடேஜா (10 விக்.,) எழுச்சி காண வேண்டும்.
'டாப்-ஆர்டர்' பலம்: குஜராத் அணியின் 'டாப்-ஆர்டரில்' சாய் சுதர்சன் (652 ரன்), கேப்டன் சுப்மன் கில் (618), பட்லர் (498) சிறப்பாக உள்ளது. ஆனால், பெங்களூருவுக்கு எதிரான தகுதிச்சுற்று-1ல் இந்த மூவரும் சோபிக்காததால், 254 ரன்னை 'சேஸ்' செய்ய முடியவில்லை. இன்று எழுச்சி கண்டால் ரன் மழை பொழியலாம். 'மிடில்-ஆர்டரில்' வாஷிங்டன் சுந்தர், ராகுல் டிவாட்டியா, ஜேசன் ஹோல்டர் உதவினால், நல்ல ஸ்கோரை பெறலாம்.
'வேகத்தில்' ரபாடா (26 விக்கெட்) கைகொடுக்கிறார். முகமது சிராஜ் (17), ஹோல்டர் (15), பிரசித் கிருஷ்ணா (15) உள்ளிட்டோரும் மிரட்டினால், விக்கெட் வேட்டை நடத்தலாம். 'சுழலில்' ரஷித் கான் (19 விக்கெட்) பலம் சேர்க்கிறார்.
இதுவரை
கிரிக்கெட் லீக் அரங்கில் இவ்விரு அணிகள் மோதிய 10 போட்டியில், குஜராத் 7, ராஜஸ்தான் 3ல் வென்றன. இதில், இம்முறை மோதிய 2 போட்டியில், இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்றன.
* வானம் தெளிவாக இருக்கும், மழைக்கு வாய்ப்பு இல்லை.
* ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும்.
