/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய பெண்கள் அணி அறிவிப்பு * 'டி-20' உலக கோப்பை தொடருக்காக...
/
இந்திய பெண்கள் அணி அறிவிப்பு * 'டி-20' உலக கோப்பை தொடருக்காக...
இந்திய பெண்கள் அணி அறிவிப்பு * 'டி-20' உலக கோப்பை தொடருக்காக...
இந்திய பெண்கள் அணி அறிவிப்பு * 'டி-20' உலக கோப்பை தொடருக்காக...
ADDED : ஆக 27, 2024 11:25 PM

புதுடில்லி: 'டி-20' உலக கோப்பை தொடருக்கான இந்திய பெண்கள் அணியில் தமிழகத்தின் ஹேமலதா இடம் பிடித்தார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக். 3-20ல் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்க உள்ளது.
இதில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர், துணைக் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா தொடர்கின்றனர். கடந்த 2018ல் முதன் முதலில் ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதுவரை 3 தொடரில் 2020ல் மட்டும் அணியை பைனலுக்கு கொண்டு சென்றார். மற்ற இரு தொடரில் இந்தியா அரையிறுதியுடன் திரும்பியது.
இம்முறை அனுபவம், இளமை கலந்த அணியாக இந்தியா உள்ளது. 'டாப் ஆர்டரில்' ஷபாலி, ஸ்மிருதி மந்தனா கைகொடுக்க, 'மிடில் ஆர்டரில்' ஜெமிமா, ரிச்சா சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழக பேட்டர் ஹேமலதாவும் அணியில் வாய்ப்பு பெற்றார்.
யஸ்திகா (முழங்கால்), சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயான்கா (கை விரல்) காயத்தால் அவதிப்பட்ட போதும் அணியில் இடம் பெற்றுள்ளனர். முழுமையாக குணமடைந்தால் களமிறங்கும் அணியில் சேர்க்கப்படலாம்.
தவிர சுழலில் தீப்தி, ஆஷா ஷோபனா, ராதா இடம் பெற, வேகத்தில் ரேணுகா, அருந்ததி, பூஜா இடம் பிடித்தனர்.
அணி விபரம்:
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணைக்கேப்டன்), ஷபாலி, தீப்தி, ஜெமிமா, ரிச்சா, யஸ்திகா, பூஜா, அருந்ததி, ரேணுகா, ஹேமலதா, ஆஷா ஷோபனா, ராதா, ஸ்ரேயான்கா, சஜனா.
இந்தியா-பாக்., மோதல்
'டி-20' உலக கோப்பையில் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி லீக் முறையில் நடக்கும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு (அக். 17, 18) செல்லும். 22 போட்டி முடிவில், அக். 20ல் துபாயில் பைனல் நடக்கும்.
* இந்திய அணி 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. தனது முதல் போட்டியில் இந்திய அணி, அக். 4ல் நியூசிலாந்தை சந்திக்கிறது. அக். 6ல் பாகிஸ்தானுடன் மோதுகிறது.
இந்திய அணி பங்கேற்கும் லீக் போட்டிகள்:
தேதி எதிரணி நேரம்
அக். 4 நியூசிலாந்து இரவு 7:30 மணி
அக். 6 பாகிஸ்தான் மதியம் 3:30 மணி
அக். 9 இலங்கை இரவு 7:30 மணி
அக். 13 ஆஸ்திரேலியா இரவு 7:30 மணி
* உலக கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் (செப். 29), தென் ஆப்ரிக்காவுடன் (அக். 1) மோத உள்ளது.