/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இங்கிலாந்து அணி 'கிரேட் எஸ்கேப்' * போராடி வீழ்ந்தது வங்கம்
/
இங்கிலாந்து அணி 'கிரேட் எஸ்கேப்' * போராடி வீழ்ந்தது வங்கம்
இங்கிலாந்து அணி 'கிரேட் எஸ்கேப்' * போராடி வீழ்ந்தது வங்கம்
இங்கிலாந்து அணி 'கிரேட் எஸ்கேப்' * போராடி வீழ்ந்தது வங்கம்
ADDED : அக் 07, 2025 11:16 PM

கவுகாத்தி: உலக கோப்பை லீக் போட்டியில் வங்கதேச பிடியில் இருந்து தப்பிய இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியா, இலங்கையில் பெண்கள் உலக கோப்பை தொடரின் (50 ஓவர்) 13வது சீசன் நடக்கிறது. நேற்று, கவுகாத்தியில் நடந்த லீக் போட்டியில் இங்கிலாந்து, வங்கதேச அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் நாட் ஸ்கிவர்-பிரன்ட், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
ரபயா கான் விளாசல்
வங்கதேச அணி துவக்கத்தில் தடுமாறியது. ருபயா ஹைதர்(4), கேப்டன் நிகர் சுல்தானா (0), ஷர்மின் அக்தர் (30) அவுட்டாக, 15.3 ஓவரில் 59/3 ரன் எடுத்து தவித்தது. பின் தனிநபராக போராடிய சோபனா மொஸ்தாரி (60) அரைசதம் கடந்தார். மிடில் ஆர்டர் பேட்டர்கள் ஏமாற்றினர். கடைசி கட்டத்தில் ரபயா கான் (27 பந்தில் 43 ரன்*, 6x4, 1x6, ஸ்டிரைக் ரேட் 159.25) அதிரடியாக ரன் சேர்த்தார். வங்கதேச அணி 49.4 ஓவரில் 178 ரன் மட்டும் எடுத்தது.
இங்கிலாந்து சார்பில் சோபி எக்லஸ்டோன் அதிகபட்சமாக 3 விக்கெட் சாய்த்தார்.
பஹிமா திருப்பம்
சுலப இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு ஏமி ஜோன்ஸ் (1), டாமி பியமான்ட் (13) ஏமாற்றினார். மரூபா ஓவரில் நாட் ஸ்கிவர்-பிரன்ட் 3 பவுண்டரி விளாசினார். பஹிமா பந்தை ஹீதர் நைட் அடிக்க, ஷோர்னா அக்தர் மிகவும் தாழ்வாக பிடித்தார். 'ரீப்ளே'வில் துல்லிய முடிவு கிடைக்காததால், 'டிவி' அம்பயர் காயத்ரி வேணுகோபாலன் (இந்தியா) 'நாட் அவுட்' என அறிவித்தார். வங்கதேச அணியினர் அதிர்ச்சி அடைந்தனர். நைட், 13 ரன்னில் கண்டம் தப்பினார். 18 ஓவரில் இங்கிலாந்து 69/2 ரன் எடுத்து வலுவாக இருந்தது. இந்த நேரத்தில் பஹிமா திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது ஓவரின் 2வது பந்தில் (18.2), நாட் ஸ்கிவர்-பிரன்ட் (32) அவுட்டானார். 5வது பந்தில் சோபியா டங்க்லி (0) வெளியேறினார். பஹிமாவின் அடுத்த ஓவரில் எம்மா லாம்ப் (1) அவுட்டாக, 23 ஓவரில் 83/5 என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. அலிஸ் கேப்சி (20) நிலைக்கவில்லை. 30 ஓவரில் இங்கிலாந்து அணி 105/6 ரன் எடுத்து தவித்தது.
ஹீதர் நைட் அரைசதம்
பின் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹீதர் நைட், அரைசதம் கடந்து அணியை மீட்டார். மொஸ்தாரி பந்தில் சார்லி டீன் ஒரு பவுண்டரி அடிக்க, இங்கிலாந்து அணி 46.1 ஓவரில் 182/6 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஹீதர் நைட் (79, 8x4, 1x6), சார்லி டீன் (27) அவுட்டாகாமல் இருந்தனர்.
வங்கதேசம் சார்பில் பஹிமா 3 விக்கெட் வீழ்த்தினார்.