/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பிரதமர் மோடி பாராட்டு * இந்திய அணி வீராங்கனைகளுக்கு...
/
பிரதமர் மோடி பாராட்டு * இந்திய அணி வீராங்கனைகளுக்கு...
பிரதமர் மோடி பாராட்டு * இந்திய அணி வீராங்கனைகளுக்கு...
பிரதமர் மோடி பாராட்டு * இந்திய அணி வீராங்கனைகளுக்கு...
ADDED : நவ 05, 2025 11:05 PM

புதுடில்லி: உலக கோப்பை வென்ற இந்திய அணி வீராங்கனைகள், நேற்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் நடந்தது. நவி மும்பையில் நடந்த பைனலில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, லாராவின் தென் ஆப்ரிக்கா அணியை வீழ்த்தியது. பெண்கள் உலக கோப்பை தொடரில் முதன் முறையாக சாம்பியன் ஆகி புதிய வரலாறு படைத்தது.
இதையடுத்து மும்பையில் இருந்து டில்லி வந்த இந்திய அணி வீராங்கனைகள், தாஜ் ஓட்டலில் தங்கினர். நேற்று மாலை பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். வீராங்கனைகள் அனைவரும் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) 'லோகோ' பொறித்த, 'நேவி புளு' நிறத்தினால் ஆன 'கோட்', 'சூட்' அணிந்தருந்தனர். காலில் காயமடைந்த பிரதிகா, வீல் சேருடன் வந்திருந்தார்.
உலக கோப்பை தொடரில் அரையிறுதி, பைனலில் பங்கேற்று, கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த துவக்க வீராங்கனை ஷைபாலி வர்மா பி.சி.சி.ஐ., தலைவர் மிதுன் மன்ஹாஸ், பயிற்சியாளர் அமோல் மஜும்தார் உடன் இருந்தனர்.
'ஜெர்சி' பரிசு
அப்போது உலக கோப்பையை ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, மோடியிடம் வழங்கினர். தவிர, மோடியை குறிக்கும் வகையில், 1ம் எண் கொண்ட, 'நமோ' என்ற பெயர் பொறித்த, நீல நிற ஜெர்சியை வழங்கினர். இதில் இந்திய அணி வீராங்கனைகள் அனைவரும் கையெழுத்திட்டு இருந்தனர். வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். தங்களது வெற்றி அனுபவங்களை வீராங்கனைகள் பகிர்ந்து கொண்டனர்.
'டாட்டூ' பலம்
அப்போது தீப்தி சர்மாவின் கையில் இருந்த 'ஜெய் ஸ்ரீராம்' என்ற 'டாட்டூ' குறித்து கேட்டார். இதற்கு தீப்தி,' இது தான் எனக்கு வலிமை தருகிறது' என்றார். பைனலில் கடைசியாக 'கேட்ச்' செய்ததும், ஹர்மன்பிரீத் கவுர், பந்தை தனது பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டார். இதுகுறித்து மோடி கூறுகையில்,'' வெற்றிக்கான பந்து அவருக்கு கிடைத்தது அதிர்ஷ்டம். அதனால் தான் வைத்துக் கொண்டார்,'' என்றார்.
கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில்,'' கடந்த 2017 பைனலில் தோற்ற பின், கோப்பை இல்லாமல் பிரதமர் மோடியை சந்தித்தோம். தற்போது உலக கோப்பையுடன் சந்தித்து உள்ளோம். மீண்டும் அடிக்கடி சந்திப்போம்,'' என்றார்.

