/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
இந்திய கால்பந்து பயிற்சியாளர் நீக்கம்
/
இந்திய கால்பந்து பயிற்சியாளர் நீக்கம்
ADDED : ஜூன் 17, 2024 11:10 PM

புதுடில்லி: இந்திய கால்பந்து அணி பயிற்சியாளர் பதவியில் இருந்து இகோர் ஸ்டிமாக் நீக்கப்பட்டார்.
உலக கோப்பை கால்பந்தில் (1998) வெண்கலம் வென்ற குரோஷிய அணியில் இடம் பெற்றவர் இகோர் ஸ்டிமாக். 18 ஆண்டு பயிற்சியாளர் அனுபவம் வாய்ந்த இவரது தலைமையில், குரோஷிய அணி 2014 ல் மீண்டும் உலக கோப்பைக்கு தகுதி பெற்றது. இதையடுத்து கடந்த 2019, மே மாதம் இந்திய கால்பந்து அணி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இவரது பயிற்சியில் இந்திய அணி பல்வேறு வெற்றி பெற்றது. இருப்பினும் முக்கிய போட்டிகளில் தொடர்ந்து ஏமாற்றுகிறது. சமீபத்தில் நடந்த 2026 உலக கோப்பை தொடருக்கான ஆசிய பிரிவு கடைசி லீக் போட்டியில் இந்திய அணி 1-2 என கத்தாரிடம் தோற்றது. போட்டியின் 72 வது நிமிடம் வரை இந்தியா முன்னிலையில் இருந்த போதும், கடைசியில் தோற்று, மூன்றாவது தகுதிச்சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
அடுத்து 2027, ஆசிய கோப்பை தொடருக்கான 3வது தகுதிச்சுற்றுக்கு தயாராகி வருகிறது. இதனிடையே, பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக், பதவிக்காலம் முடியும் முன்பே, அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இது உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அகில இந்திய கால்பந்து சங்கம் (ஏ.ஐ.எப்.எப்.,) தெரிவித்துள்ளது. 'சர்வதேச அரங்கில் எதிரணியின் சவால்களை திறம் பட எதிர் கொள்ள, இந்திய அணியை சர்வதேச தரத்துக்கு ஏற்ப மாற்றும் திறன் கொண்ட, புதிய பயிற்சியாளரை தேடும் பணியில்,' ஏ.ஐ.எப்.எப்., ஈடுபட்டுள்ளது.