/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
'உலக' கால்பந்து: பிரேசில் சாதனை * தொடர்ந்து 23 வது முறையாக தகுதி
/
'உலக' கால்பந்து: பிரேசில் சாதனை * தொடர்ந்து 23 வது முறையாக தகுதி
'உலக' கால்பந்து: பிரேசில் சாதனை * தொடர்ந்து 23 வது முறையாக தகுதி
'உலக' கால்பந்து: பிரேசில் சாதனை * தொடர்ந்து 23 வது முறையாக தகுதி
ADDED : ஜூன் 11, 2025 10:55 PM

சாவ் பாலோ: உலக கோப்பை கால்பந்து தொடரில் தொடர்ந்து 23வது முறையாக பங்கேற்க தகுதி பெற்று சாதனை படைத்தது பிரேசில் அணி.
'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்காவில், 2026, ஜூன் 11-ஜூலை 19ல் நடக்க உள்ளது. மொத்தம் 48 அணிகள் பங்கேற்க உள்ளன. இதன், தென் அமெரிக்க அணிகளுக்கான தகுதிச்சுற்றில் 10 அணிகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோதும். முடிவில் பட்டியலில் 'டாப்-6' இடம் பெறும் அணிகள் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.
இதன் 16 வது சுற்று போட்டி பிரேசிலின் சாவ் பாலோ நகரில் நடந்தது. பிரேசில் அணி பராகுவேயை எதிர்கொண்டது. முதல் பாதி முடிவதற்கு ஒரு நிமிடத்துக்கு முன், பந்தை கொண்டு சென்ற மதியாஸ் குன்ஹா, பந்தை பராகுவே கோல் ஏரியாவுக்குள் அனுப்பினார். அங்கு மின்னல் வேகத்தில் வந்த வினிசியஸ் ஜூனியர், வலது காலால் பந்தை உதைத்து வலைக்குள் தள்ளி, கோலாக மாற்றினார்.
இரண்டாவது பாதியில் இரு அணி தரப்பிலும் யாரும் கோல் அடிக்கவில்லை. முடிவில் பிரேசில் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
23வது முறை
இதுவரை பங்கேற்ற 16 போட்டியில் 7 வெற்றி, 4 'டிரா', 5 தோல்வியுடன் 25 புள்ளி பெற்று, பட்டியலில் 3வது இடம் பிடித்தது. இன்னும் 2 போட்டி மட்டும் மீதம் உள்ள நிலையில், 7வது இடத்தில் உள்ள வெனிசுலாவை விட 7 புள்ளி அதிகம் பெற்ற பிரேசில் அணி, 'டாப்-6' இடத்தை உறுதி செய்தது.
இதையடுத்து கடந்த 1930 முதல் தொடர்ந்து 23வது முறையாக 'பிபா' உலக கோப்பை தொடரில் பங்கேற்க பிரேசில் அணி தகுதி பெற்றது. இதில் ஐந்து முறை (1958, 1962, 1970, 1994, 2002) சாம்பியன் ஆனது.
தவிர, தென் அமெரிக்கா பிரிவில் இருந்து நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா (35 புள்ளி), ஈகுவடார் (25) அணிகளும் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றன.
* பிரேசிலுக்கு அடுத்து, ஜெர்மனி 20, அர்ஜென்டினா, இத்தாலி, மெக்சிகோ தலா 18 முறை உலக கோப்பை தொடரில் பங்கேற்றன.