/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
மெஸ்சி 'ஹாட்ரிக்': மேஜர் லீக் கால்பந்தில்
/
மெஸ்சி 'ஹாட்ரிக்': மேஜர் லீக் கால்பந்தில்
ADDED : அக் 20, 2024 09:32 PM

போர்ட் லாடர்டேல்: மெஸ்சி 'ஹாட்ரிக்' கோல் அடித்து கைகொடுக்க இன்டர் மியாமி அணி 6-2 என நியூ இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. லீக் சுற்றில் முடிவில் இன்டர் மியாமி அணி, புள்ளிப்பட்டியலில் 'நம்பர்-1' இடத்தை கைப்பற்றியது.
அமெரிக்காவில், மேஜர் லீக் கால்பந்து 29வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் இன்டர் மியாமி, நியூ இங்கிலாந்து அணிகள் மோதின. அபாரமாக ஆடிய இன்டர் மியாமி அணி 6-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இன்டர் மியாமி அணிக்கு மெஸ்சி 3 கோல் (78, 81, 89வது நிமிடம்) அடித்து கைகொடுத்தார். இது, மேஜர் லீக் கால்பந்தில் மெஸ்சியின் முதல் 'ஹாட்ரிக்' கோல் ஆனது. தவிர லுாயிஸ் சாரஸ் 2 (40, 43வது நிமிடம்), கிரேமாச்சி ஒரு கோல் (58வது நிமிடம்) அடித்தனர்.
மெஸ்சி '33'
இன்டர் மியாமி சார்பில் அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் மெஸ்சி முதலிடத்துக்கு முன்னேறினார். இதுவரை 36 போட்டியில், 33 கோல் அடித்துள்ளார். இதில் மேஜர் லீக் கால்பந்தில் 21, லீக்ஸ் கோப்பையில் 10, 'கான்ககப்' சாம்பியன்ஸ் கோப்பையில் 2 கோல் அடங்கும். ஈகுவடாரின் லியோனார்டோ காம்பானா (32 கோல்) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஏற்கனவே மெஸ்சி, பார்சிலோனா (672 கோல்), அர்ஜென்டினா (112) அணிகள் சார்பில் அதிக கோல் அடித்துள்ளார்.
மியாமி முதலிடம்லீக் சுற்றில் 34 போட்டியில், 22 வெற்றி, 8 'டிரா', 4 தோல்வி என 74 புள்ளிகளுடன் இன்டர் மியாமி அணி முதலிடத்தை தட்டிச் சென்றது. இதன்மூலம் மேஜர் லீக் கால்பந்து வரலாற்றில், ஒரு சீசனில் அதிக புள்ளி பெற்ற அணியானது. இதற்கு முன், 2021 சீசனில் நியூ இங்கிலாந்து அணி 73 புள்ளி பெற்றதே அதிகம்.