ADDED : அக் 23, 2024 10:55 PM

காத்மண்டு: தெற்காசிய கால்பந்து லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி, 1-3 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்திடம் வீழ்ந்தது.
தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், பெண்களுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 7 வது சீசன் நேபாளத்தில் நடக்கிறது. 'ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை வென்றது. நேற்று இரண்டாவது போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது.
இதில் இந்தியா எளிதாக வெல்லும் என நம்பப்பட்டது. மாறாக போட்டியின் 18 வது நிமிடம் வங்கதேசத்தின் அபெய்தா, ஒரு கோல் அடித்தார். தோஹுரா கதுன், 29, 42வது நிமிடங்களில் கோல் அடித்தார். இந்திய அணி 0-3 என பின்தங்கியது. முதல் பாதி முடிவதற்கு சற்று முன், இந்திய அணிக்கு கேப்டன் பாலா தேவி, ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார்.
இரண்டாவது பாதியில் இரு தரப்பிலும் யாரும் கோல் அடிக்கவில்லை. முடிவில் இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இருப்பினும் பட்டியலில் இரண்டாவது இடம் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.