/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
தெற்காசிய கால்பந்து: இந்தியா ஏமாற்றம்
/
தெற்காசிய கால்பந்து: இந்தியா ஏமாற்றம்
ADDED : அக் 27, 2024 11:01 PM

காத்மண்டு: நேபாளத்தில், பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 7வது சீசன் நடக்கிறது. காத்மண்டுவில் நடந்த அரையிறுதியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதின. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.
ரசிகர்கள் ஆவேசம்: ஆட்டத்தின் 52வது நிமிடத்தில் நேபாள வீராங்கனை ரேகாவுக்கு 'ரெட் கார்டு' காட்டி வெளியேற்றப்பட்டார். ஆத்திரமடைந்த நேபாள ரசிகர்கள், மைதானத்திற்குள் பாட்டிலை எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. சுமார் 11 நிமிடங்களுக்கு பின் மீண்டும் போட்டி தொடர்ந்தது.
ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் இந்தியாவின் சங்கீதா ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். பின், 72வது நிமிடத்தில் நேபாளத்தின் பிரீத்தி அடித்த கோல் மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேபாள வீராங்கனைகள் மைதானத்தை விட்டு வெளியேறினர். ஒரு மணி நேரம், 10 நிமிட போராட்டத்திற்கு பின் நேபாள வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்க சம்மதம் தெரிவித்தனர்.
'பெனால்டி ஷூட் அவுட்': ஆட்டத்தின் 141வது நிமிடத்தில் நேபாளத்தின் சபித்ரா ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து போராடிய இரு அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது. பின் 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டது. இதில் ஏமாற்றிய இந்தியா 2-4 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.