அமெரிக்க வரி விதிப்புக்கு கமல் கண்டனம்: முழு தேசமும் ஒன்றாக செயல்பட அழைப்பு
அமெரிக்க வரி விதிப்புக்கு கமல் கண்டனம்: முழு தேசமும் ஒன்றாக செயல்பட அழைப்பு
ADDED : ஆக 29, 2025 04:03 AM

சென்னை: 'இந்திய பொருட்கள் மீது, அமெரிக்கா புதிய வரிகளை விதித்துள்ள நிலையில், முழு தேசமும் ஒன்றாக செயல்பட வேண்டும்' என, மக்கள் நீதி மய்யம் தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
அமெரிக்கா விதித்துள்ள வரிகள், ஏகாதிபத்தியத்தின் புதிய கருவியாக பயன்படுத்தப்படுகிறது.
நம் ஏற்றுமதியாளர்கள் மீது விதிக்கப்பட்ட 50 சதவீதம் வரி, வர்த்தகத்திற்காகவோ, உக்ரைன் தொடர்பாகவோ அல்ல; நம் உறுதியை குலைக்கும் நோக்கத்தில் நிகழ்த்தப்பட்ட ஒரு அரசியல் தடியடி.
இதேபோல், சீனாவை நெருக்குவதற்கு அமெரிக்கா துணிவதில்லை. கனிமங்கள், காந்தங்கள், சூரிய மின்சக்தி உற்பத்தி பொருட்களை, சீனா தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அமெரிக்கா அவற்றை சார்ந்திருக்கிறது. இந்த சார்பு நிலை தான் அவர்களை கட்டுப்படுத்துகிறது.
அரசியல் விளையாட்டு சீனாவுக்கு எதிரான வரிகள் மயிலிறகால் வருடுவது போல, அரைகுறையாக விதிக்கப்படுகின்றன. ஆனால், இந்தியா மீது, சுத்தியலால் அடிப்பது போல் முழு வலிமையோடு வரிகள் விதிக்கப்படுகின்றன.
ஜவுளி, ஆயத்த ஆடை ஏற்றுமதியின் இதயத் துடிப்பான திருப்பூர், சூரத் மற்றும் நொய்டாவில் உள்ள நம் சகோதரர்களுடன், நான் துணையாக இருக்கிறேன்.
உலகின் முன்னணி ஏற்றுமதியாளரான ஆந்திர இறால் விவசாயிகளுடனும்; குஜராத், மஹாராஷ்டிராவில் ரத்தினம், ஆபரண தொழிலில் உள்ள நம் சகோதரர்களுடனும்; நம் பொருளாதாரத்தின் முதுகெலும்பை உருவாக்கிய எக்கு தொழிலாளர்களுடனும் நான் துணை நிற்கிறேன்.
உலக அரசியல் விளையாட்டுகளின் விளைவை, அவர்கள் மீது சுமத்தக் கூடாது. நாம் அனைவரும் தேசிய ஒற்றுமையுடன் நிற்க வேண்டிய தருணம் இது.
அச்சுறுத்தல் நம் கருத்து வேறுபாடுகள் ஒருபக்கம் இருக்கட்டும்; நம் குடியரசு ஒற்றுமையாக நிலைக்க வேண்டும். இந்தியர்களின் வாழ்வாதாரமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது, முழு தேசமும் ஒன்றாக செயல்பட வேண்டும்.
சிறப்பு அவசரகால கடன் வசதி ஒன்றை ஏற்படுத்த வேண்டும். குறைந்த வட்டியில் ஏற்றுமதிக் கடன்களை, மீண்டும் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட ஏற்றுமதித் துறைகளுக்கான ஊக்கத் தொகையை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு கமல் கூறி உள்ளார்.