ADDED : ஆக 21, 2026 10:51 PM

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில், வரும் ஆக. 30ல் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் துவங்குகிறது. இதன் ஒற்றையர் பிரிவில், வலது கை மணிக்கட்டு பகுதி காயத்தில் இருந்து மீண்ட 'நடப்பு சாம்பியன்' ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் பங்கேற்க உள்ளார். இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் கோப்பை வென்ற அல்காரஸ், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டனில் விளையாடவில்லை.
கடந்த ஆண்டு யு.எஸ்., ஓபனில் பைனல் வரை சென்ற இத்தாலியின் ஜானிக் சின்னர், வலது முழங்கால் காயத்தால் விலகினார்.
அரையிறுதியில் ஜெசிகா
சின்சினாட்டி: அமெரிக்காவில், சின்சினாட்டி ஓபன்
டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில்
அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, அமண்டா அனிசிமோவா மோதினர். இதில் ஜெசிகா
6-4, 2-6, 7-6 என வெற்றி பெற்றார். மற்றொரு காலிறுதியில் போலந்தின் இகா
ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா மோதினர். முதல் செட்டில் 1-4 என
பின்தங்கி இருந்த போது இடது கணுக்காலில் காயமடைந்த ரிபாகினா, பாதியில்
விலகினார். ஸ்வியாடெக் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
எக்ஸ்டிராஸ்
* ஐதராபாத்தில், வரும் டிச. 8-13ல் டென்னிஸ் பிரிமியர் லீக் (டி.பி.எல்.,) 8வது சீசன் நடக்கவுள்ளது. இதில் 'நடப்பு சாம்பியன்' டில்லி, ஐதராபாத், லக்னோ, கொல்கட்டா, மும்பை, குஜராத், ராஜஸ்தான், குர்கான் என, 8 அணிகள் பங்கேற்கின்றன.
* 'கிராண்ட் செஸ் டூர்' 11வது சீசன், 5 தொடர்களாக நடந்தது. இதில் 'டாப்-4' இடம் பெற்ற நான்கு வீரர்கள், இன்று அமெரிக்காவின் செயின்ட் லுாயிசில் துவங்கும் பைனலுக்கு தகுதி பெற்றனர். இதில், இந்தியாவின் பிரக்ஞானந்தா-ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், அமெரிக்க வீரர்கள் வெஸ்லே-பேபியானோ, நேரடியாக அரையிறுதியில் மோதுகின்றனர்.
* மும்பையில், ஆசிய ஜூனியர் கிளாசிகல் செஸ் தொடர் நடக்கிறது. இதன் ஓபன் பிரிவு 2வது சுற்றில் குரு பிரகாஷ், விஷால் ஷாவை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் மானவ் குமார், அருண் கட்டாரியை வென்றார்.
* கான்பூரில், தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடந்தது. பெண்கள் (17 வயது) ஒற்றையர் பைனலில், மஹாராஷ்டிராவின் திவ்யான்ஷி 3-1 என, தமிழகத்தின் அனன்யாவை வீழ்த்தினார். ஆண்களுக்கான பைனலில் குஜராத்தின் விவான் தேவ் 3-2 என, கர்நாடகாவின் அதர்வாவை வென்றார்.
