ADDED : ஆக 21, 2026 10:49 PM

புதுடில்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய ஈட்டி எறிதல் வீரர் ஷிவ்பால் சிங்கிற்கு, பத்து ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
இந்திய ஈட்டி எறிதல் வீரர் ஷிவ்பால் சிங் 31. டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றவர். கடந்த 2019ல் தோஹாவில் (கத்தார்) நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 86.23 மீ., துாரம் ஈட்டி எறிந்து வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.
கடந்த 2021ல் போட்டி இல்லாத நாளில் நடந்த சோதனையில் இவர், தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவர, 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில், காலாவதியான மருந்து சாப்பிட்டதால் தான் தவறு நேர்ந்தது என வாதிட்டார். இதை ஏற்ற தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையம் (என்.ஏ.டி.ஏ.,) ஒரு ஆண்டாக தடையை குறைத்தது.
பின் 2023 தேசிய விளையாட்டில் தங்கம் வென்றார். தற்போது இரண்டாவது முறையாக ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார். இதனால், இவருக்கு பத்து ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
இதேபோல, இரண்டாவது முறையாக சிக்கிய தடகள வீராங்கனை ஜில்னா, தற்காலிகமாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
