ADDED : ஜூன் 06, 2026 10:53 PM

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில், 'சூப்பர் 1000' அந்தஸ்து பெற்ற இந்தோனேஷிய ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஜப்பானின் அகானே யமாகுச்சி, தென் கொரியாவின் யூ ஜின் சிம் மோதினர். அபாரமாக ஆடிய யமாகுச்சி 21-14, 21-7 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் தென் கொரியாவின் ஆன் சே யங், சீனாவின் யூ பெய் சென் மோதினர். இதில் ஆன் சே யங் 21-17, 19-21, 23-21 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.
கனடா-அயர்லாந்து 'டிரா'
மான்ட்ரியல்: மெக்சிகோ, கனடா, அமெரிக்காவில், உலக கோப்பை கால்பந்து 23வது சீசன் (ஜூன் 11 - ஜூலை 19) நடக்கவுள்ளது. மொத்தம் 48 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணிகளும், பயிற்சி போட்டியில் விளையாடுகின்றன. கனடாவின் மான்ட்ரியல் நகரில் நடந்த போட்டியில் கனடா, அயர்லாந்து அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.
மற்றொரு பயிற்சி போட்டியில் பெரு, ஹைதி அணிகள் மோதின. இதில் பெரு அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மீனாட்சி, தீபக் தேர்வு
புதுடில்லி: சீனாவில், வரும் ஜூன் 15-21ல் உலக குத்துச்சண்டை கோப்பை ('ஸ்டேஜ்-2') நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் காமன்வெல்த், ஆசிய விளையாட்டுக்கான தகுதி போட்டியில் 2வது இடம் பிடித்த இந்திய நட்சத்திரங்கள் தேர்வாகினர். பெண்கள் பிரிவில் மீனாட்சி (51 கிலோ), பூணம் (54), பிராச்சி (57), ஆண்கள் பிரிவில் தீபக் (70 கிலோ), ரிஷி (50), நிகில் (55), அன்மோல் (60) உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
