/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
அன்னு ராணி ஏமாற்றம்: ஒலிம்பிக் ஈட்டி எறிதலில்
/
அன்னு ராணி ஏமாற்றம்: ஒலிம்பிக் ஈட்டி எறிதலில்
ADDED : ஆக 07, 2024 11:53 PM

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை அன்னு ராணி ஏமாற்றினார்.
பிரான்சில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. பெண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று நடந்தது. மொத்தம் 32 வீராங்கனைகள், இரு பிரிவுகளாக பங்கேற்றனர். 'ஏ' பிரிவில் இடம் பிடித்திருந்த இந்தியாவின் அன்னு ராணி 31, முதல் வாய்ப்பில் 55.81 மீ., எறிந்தார். அடுத்த இரு வாய்ப்புகளில் 53.22, 53.55 மீ., எறிந்தார். முடிவில் 'ஏ' பிரிவில் 15வது இடம் பிடித்த இவர், ஒட்டுமொத்தமாக 26வது இடத்தை கைப்பற்றி பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். கடந்த 2021ல் தேசிய சாதனை (63.24 மீ.,) படைத்த இவர், ஆசிய விளையாட்டில் (2022) தங்கம் வென்றார். உலக தரவரிசை அடிப்படையில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
ஜோதி '7'பெண்களுக்கான 100 மீ., தடை தாண்டும் ஓட்டத்தின் தகுதிச் சுற்று நடந்தது. மொத்தம் 40 பேர், 5 பிரிவுகளாக பங்கேற்றனர். 'ஹீட்-4' பிரிவில் இடம் பிடித்திருந்த இந்தியாவின் ஜோதி 24, பந்தய துாரத்தை 13.16 வினாடியில் கடந்து 7வது இடம் பிடித்தார். அரையிறுதிக்கு நேரடியாக தகுதி பெறத்தவறிய இவர், 'ரெபிசேஜ்' போட்டியில் விளையாடுகிறார். இதில் சாதித்தால் அரையிறுதிக்குள் நுழையலாம்.
சர்வேஷ் '13'ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் தகுதிச் சுற்று நடந்தது. மொத்தம் 30 பேர், இரு பிரிவுகளாக பங்கேற்றனர். 'பி' பிரிவில் இடம் பெற்ற இந்தியாவின் சர்வேஷ் அனில் குஷாரே, அதிகபட்சமாக 2.15 மீ., தாண்டினார். 'பி' பிரிவில் 13வது இடம் பிடித்த இவர், ஒட்டுமொத்தமாக 25வது இடம் பிடித்து பைனல் வாய்ப்பை இழந்தார்.
நடை போட்டி
மாரத்தான் நடை போட்டி கலப்பு இரட்டையர் 'ரிலே' பிரிவு பைனலில் இந்தியாவின் சுராஜ் பன்வார், பிரியங்கா கோஸ்வாமி ஜோடி பங்கேற்றது. இதில் 41.4 கி.மீ., துாரத்தை கடந்த போது இந்திய ஜோடி பாதியில் விலகியது.
கோல்ப்: திக் ஷா 7வது இடம்
பெண்களுக்கான கோல்ப் போட்டியில் இந்தியா சார்பில் அதிதி, திக் ஷா தாகர் பங்கேற்கின்றனர். முதல் சுற்றின் முடிவில் 71 புள்ளிகளுடன் திக் ஷா தாகர், 7வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனை அதிதி, 72 புள்ளிகளுடன் 12வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
நீளம் தாண்டுதல்: கிரீஸ் வீரர் சாதனை
பாரிஸ் ஒலிம்பிக் ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் பைனலில் கிரீசின் மில்டியாடிஸ் டென்டோக்லோ 26, பங்கேற்றார். 'நடப்பு உலக சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்கிய இவர், அதிகபட்சமாக 8.48 மீ., தாண்டி தங்கம் வென்றார். ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றிருந்தார். இதன்மூலம் ஒலிம்பிக் நீளம் தாண்டுதலில் தொடர்ச்சியாக 2 தங்கம் வென்ற 2வது வீரரானார். இதற்கு முன் அமெரிக்காவின் கார்ல் லுாயிஸ், தொடர்ச்சியாக 4 தங்கம் (1984, 1988, 1992, 1996) கைப்பற்றினார்.