ADDED : ஆக 10, 2024 11:06 PM

புதுடில்லி: இந்தியாவின் அபினவ் பிந்த்ரா, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விளையாட்டு வீரர்கள் ஆணையத்தின் துணை தலைவராக நியமிக்கப்பட்டார்.
முன்னாள் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா 41. குரோஷியாவில் 2006ல் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இவர், பீஜிங் ஒலிம்பிக் 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவில் தங்கத்தை சுட்டார். இதன்மூலம் ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் தங்கம் கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார்.
கடந்த 2018ல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி.,) விளையாட்டு வீரர்கள் ஆணையத்தின் உறுப்பினராக அபினவ் பிந்தரா நியமிக்கப்பட்டார். தற்போது இவர், ஐ.ஓ.சி., விளையாட்டு வீரர்கள் ஆணையத்தின் 2வது துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பின்லாந்து ஐஸ் ஹாக்கி வீராங்கனை எம்மா டெர்ஹோ 42, மீண்டும் தலைவராக தேர்வானார். முன்னாள் போலந்து சைக்கிள் பந்தய வீராங்கனை மஜா மார்டினா 40, முதல் துணை தலைவராக நியமிக்கப்பட்டார். இவர்கள் மூவரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
இதுகுறித்து அபினவ் பிந்த்ரா வெளியிட்ட செய்தியில், ''ஐ.ஓ.சி., விளையாட்டு வீரர்கள் ஆணையத்தின் 2வது துணை தலைவராக நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சி. இதன்மூலம் உலககெங்கிலும் உள்ள விளையாட்டு நட்சத்திரங்களின் நலனுக்கு பாடுபடுவேன்,'' என்றார்.