ADDED : பிப் 23, 2024 10:44 PM

பாக்தாத்: ஆசிய கோப்பை வில்வித்தை பைனலுக்கு தீபிகா குமாரி முன்னேறினார்.
ஈராக்கில் ஆசிய கோப்பை லீக் 1 வில்வித்தை தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் மூன்று முறை ஒலிம்பிக்கில் பங்கேற்ற தீபிகா குமாரி, 20 மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் களமிறங்கினார். 'ரீகர்வ்' பிரிவு ஒற்றையர் அரையிறுதியில் தீபிகா குமாரி, உஸ்பெகிஸ்தானின் ஹம்ரோயவாவை சந்தித்தார். முதல் செட் 1-1 என சமனில் முடிந்தது. அடுத்த நடந்த மூன்று செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய தீபிகா, கைப்பற்றினார். முடிவில் தீபிகா 7-1 என வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறினார்.
'ரீகர்வ்' பிரிவு அணிகளுக்கான பிரிவில் தீபிகா, சிம்ரஞ்ஜித், பஜன் கவுர் கூட்டணி, ஈராக் அணியை சந்தித்தது. இதில் முதல் 3 செட்டையும் வசப்படுத்திய இந்திய அணி, 6-0 என வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. இதில் உஸ்பெகிஸ்தானை சந்திக்கவுள்ளது.
ஆண்களுக்கான 'ரீகர்வ்' பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் திராஜ், பிரவிண் ரமேஷ், தருண்தீப் ராய் இடம் பெற்ற இந்திய அணி, 6-0 என ஈராக்கை வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறியது. 'ரீகர்வ்' பிரிவு கலப்பு இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் சிம்ரஞ்ஜித் கவுர், திராஜ் ஜோடி, 6-0 என கத்தார் ஜோடியை சாய்த்தது.
தவிர ஆண்கள் காம்பவுண்டு பிரிவில் பிரதமேஷ், குஷால், பிரியான்ஷ் இடம் பெற்ற அணி, பெண்கள் காம்பவுண்டு பிரிவில் ஆதித்தி, பிரியா, பர்னீத் கவுர் அடங்கிய அணி என மொத்தம் ஆறு பிரிவுகளில் இந்தியா பைனலுக்கு முன்னேறியது.