/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஹாக்கி... கிடைக்குமா 'ஹாட்ரிக்' * இந்திய அணி எதிர்பார்ப்பு
/
ஹாக்கி... கிடைக்குமா 'ஹாட்ரிக்' * இந்திய அணி எதிர்பார்ப்பு
ஹாக்கி... கிடைக்குமா 'ஹாட்ரிக்' * இந்திய அணி எதிர்பார்ப்பு
ஹாக்கி... கிடைக்குமா 'ஹாட்ரிக்' * இந்திய அணி எதிர்பார்ப்பு
ADDED : செப் 10, 2024 11:18 PM

ஹுலுன்பியுர்: ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டியில் இன்று இந்தியா, மலேசியா மோதுகின்றன. இதில், இந்தியா அசத்தும்பட்சத்தில் 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்யலாம்.
சீனாவின் ஹுலுன்பியுரில் 8வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடக்கிறது. 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி முதல் போட்டியில் சீனாவை 3-0 என வென்றது. இரண்டாவது சவாலில் ஜப்பானை 5-1 என வீழ்த்தியது. இன்று மலேசியாவை எதிர்கொள்கிறது.
'பீல்டு' கோல் அசத்தல்
சமீபத்திய பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய அணி, மொத்தம் 15 கோல் அடித்தது. இதில் மூன்று மட்டுமே 'பீல்டு' கோல். இது குறித்து அப்போதைய கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் கூறுகையில்,''இந்திய அணி அடுத்த கட்டத்துக்கு முன்னேற வேண்டுமானால், 'பீல்டு' கோல் அடிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்,''என்றார்.
இதற்கு ஏற்ப ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 'பீல்டு' கோல் அடிப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய அணி இதுவரை அடித்துள்ள 8 கோல்களில், 7 'பீல்டு' கோல். ஜப்பானுக்கு எதிராக சஞ்சய் அடித்த ஒரு கோல் மட்டுமே 'பெனால்டி கார்னர்' மூலம் கிடைத்தது. சுக்ஜீத் சிங் (3 கோல்), அபிஷேக் (2), உத்தம் சிங் (2) சேர்ந்து 7 'பீல்டு' கோல் அடித்தனர். இவர்கள் இன்றும் அசத்தலாம்.
ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணியின் தற்காப்பு பகுதியும் பலமாக உள்ளது. புதிய கோல்கீப்பர் கிருஷண் பகதுார் பதக் சிறப்பாக செயல்படுகிறார். ஜப்பானுக்கு எதிராக ஒரு கோல் மட்டுமே தடுக்க தவறினார்.
இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் (2 போட்டி, 2 வெற்றி, 6 புள்ளி) நீடிக்கிறது. கடந்த முறை பைனலுக்கு முன்னேறிய மலேசியாவின் ஆட்டம் இம்முறை எடுபடவில்லை. ஒரு 'டிரா', ஒரு தோல்வியுடன் 5வது இடத்தில் உள்ளது.
இந்தியா-பாக்., மோதுமா
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில் வரும் செப். 14ல் இந்தியா, பாகிஸ்தான் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் சர்வதேச அளவில் மட்டும் பங்கேற்கின்றன. அரசியல் ரீதியில் நல்லுறவு இல்லாததால், இரு நாடுகள் இடையிலான ஹாக்கி டெஸ்ட் தொடர் 18 ஆண்டுகளாக நடக்கவில்லை. கடைசியாக 2006ல் மோதின.
இது குறித்து சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் தயாப் இக்ரம் கூறுகையில்,''வாய்ப்பு கிடைத்தால், இந்தியா, பாகிஸ்தான் இடையே இரு தரப்பு ஹாக்கி தொடரை நடத்த தயாராக இருக்கிறோம். இவ்விஷயத்தில் இரு நாட்டு அரசுகளின் முடிவை மதிப்போம்,''என்றார்.